பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தண்டையார்பேட்டை: பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியமேடு கண்ணப்பர் காலனி வீடற்றோர் காப்பகத்தில் வசித்த 114 குடும்பத்தினர் வீடு வழங்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு இன்றி இருந்த 114 குடும்பத்தினருக்கும் மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தற்போது வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான, ஒடுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி பெரியமேட்டில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 114 பேருக்கு வீடு வழங்குவதற்கான ஆணையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இந்த பகுதி மக்களின் 22 ஆண்டு கனவை இன்றைக்கு திமுக அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை அடிப்படை தேவையானது. திமுகவைப் பொறுத்தவரை சொல்வதை செய்கின்ற இயக்கம். அடுத்த மழை வருவதற்குள் உங்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். சொன்னபடியே உங்களுக்கு தற்போது வீடு ஒதுக்கியுள்ளார். அரசு கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளது. இனி உங்களுக்கான வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

வீடு இல்லாததால் உங்களுக்கு அரசு ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இனி அந்த சிக்கல் இருக்காது. இனி ஆவணங்கள் எளிதில் கிடைக்கும். குறிப்பாக மகளிர்க்கும், மாணவருக்கும் ஏராளமான திட்டங்களை அரசு செய்து வருகிறது.
இங்கு வந்திருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை, உங்கள் பிள்ளைகளுக்கு எதை கொடுக்கிறீர்களோ இல்லையோ கல்வியை கொடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு மட்டும் அனுப்புங்கள். மற்றவற்றை நம் முதல்வர் பார்த்துக் கொள்வார். அனைத்திற்கும் அரசு துணை நிற்கும் என்றார். மேலும் அங்கு வசிக்கும் 200 குடும்பத்தினருக்கு படிப்படியாக வீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்