50 சதவீதம் மானியத்துடன் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அருண்ராஜ் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை (18ம் தேதி) பிற்பகல் 5.30 மணியளவில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடி 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அமையவுள்ள ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக்கொண்டதாக இருக்கும். i) நிலம், ii) உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்). iii) ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள்.

iv) உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள். v) இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள். சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட (ii), (iii) மற்றும் (iv) இனங்கள் ஆகும். எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம். முகவரி: 1கி-2/1, சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம்- 636 006. தொலைபேசி எண். 0427- 2913006.

Related posts

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!