பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ரூ.11 லட்சம் செலவில் வரவேற்பு அறை: இணைஆணையர் திறந்து வைத்தார்

பெரம்பூர்: பெரவள்ளூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் காவல் நிலையம், துணை ஆணையர் அலுவலகம், கவுன்சலிங் அறை, அதிதீவிர ரவுடிகள் ஒழிப்பு பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட 7 அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும்போது சில அதிகாரிகள் இல்லாத பட்சத்தில் பொதுமக்கள் காத்திருந்து அவர்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பெரவள்ளூர் காவல் நிலையம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், காவல் நிலைய வளாகத்தில் ரூ.11 லட்சம் செலவில் பொதுமக்கள் வரவேற்பறை கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று நேற்று இந்த வரவேற்பறையை மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர் திறந்து வைத்தார். பொதுமக்கள் வந்தால் அமர்வதற்கு ஏற்ற வகையில் சொகுசு இருக்கைகள் மற்றும் டிவி மின்விசிறி உள்ளிட்ட பல வசதிகள் இந்த வரவேற்பு அறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் இந்த வரவேற்பறையில் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், இணை ஆணையர் மனோகர் பேசுகையில், ‘‘பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வரும்போது அவர்கள் எந்த ஒரு சங்கடத்திற்கும் ஆளாக கூடாது என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கு இது போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன. மகளிர் காவல் நிலையத்திற்கு பெண்கள் கை குழந்தைகளுடன் வருகின்றனர். அவர்கள் ஓய்வெடுக்கவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கவும் இந்த அறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். வரவேற்பறையில் எப்போதும் ஒரு வரவேற்பாளர் இருப்பார். அவர் பொதுமக்களிடம் பேசி பொதுமக்கள் எந்த அதிகாரியை பார்க்க வந்துள்ளார்களோ அந்த அதிகாரி காவல் நிலையத்தில் உள்ளாரா என்பதை தொலைபேசி மூலமாக உறுதி செய்து அதன் பிறகு குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்.

அதுவரை பொதுமக்கள் வரவேற்பு அறையில் இருக்கலாம் இதன் மூலம் பொதுமக்கள் ஆங்காங்கே நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. விரைவில் இந்த திட்டம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில் கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் சிவக்குமார், ராகவேந்திர ரவி, ஆதி மூலம் இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், சூரிய லிங்கம் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை