பெரம்பூரில் விபத்துகளை தடுக்கும் வகையில் சோலார் சிக்னல் கம்பங்கள்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

பெரம்பூர்: பெரம்பூரில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில், முக்கிய சந்திப்புகளில், சோலார் மூலம் இயங்கும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்து போலீசார் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள் குறித்து செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் போலீசார் களஆய்வு நடத்தி, 3 இடங்களை தேர்வு செய்தனர். அதில், அதிகமாக விபத்துக்கள் நடைபெறும் பெரம்பூர் நெடுஞ்சாலை, பிபி சாலை சந்திப்பு, பெரம்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி வாகனங்கள் தடுப்புகளின் மீது மோதி விபத்து ஏற்படுவதும், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, வடக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில், பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதி, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பகுதி மற்றும் பிபி சாலை பகுதி என 3 இடங்களில் சோலார் மூலம் இயங்கும் சிக்னல் கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விபத்துக்கள் குறைந்து அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும பொதுமக்கள் பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி கூறுகையில், ‘‘அதிக மக்கள் தொகை மிகுந்த பெரம்பூர் பகுதியில், காலை மற்றும் மாலை வேளையில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பழைய சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு, சோலார் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு, இந்த சோலார் சிக்னல் கம்பங்கள் நல்ல வழிகாட்டியாக அமையும். மேலும், பல்வேறு வாகனங்கள் இந்த பகுதியில் தடுப்புகளின் மீது மோதி விபத்த ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை தடுக்கவும் இந்த முறை கையாளப்பட்டுள்ளது. பெரம்பூர் பகுதியில் மாதவரம் நெடுஞ்சாலை பேப்பர் மில்ஸ் சாலை, பல்லவன் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மேலும் சில சோலார் கம்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்