மிளகு சில காரம் சாரமான தகவல்கள்!

பாக்கெட்டில் நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பார்கள். பகைவர்கள் விஷம் வைத்துக் கொடுத்தாலும் கூட அதை பாக்கெட்டில் உள்ள மிளகை வைத்து முறித்துவிடலாம் என இந்தச் சொலவடையைச் சொல்வார்கள். அந்தளவுக்கு மருத்துவக்குணம் மிகுந்தது மிளகு. இதனால்தான் நம் வீட்டு சமையல் அறையில் மிளகுக்கு முக்கிய இடத்தை வழங்கி இருக்கிறோம். இன்று ஆம்லெட், ஆஃப் பாயில், சிக்கன் ரைஸ், பொங்கல், சட்னி என அனைத்திலும் மிளகின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. அதெல்லாம் நமக்கும் நல்லா தெரியும் என்கிறீர்களா? மிளகு குறித்த சில காரம் சாரமான தகவல்களும் இருக்குங்க. அதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க. நம்ம இந்திய நாட்டில் மிளகை எப்போதில் இருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா? சுமார் 4 ஆயிரம் வருசத்துக்கு முந்தி என்கிறார்கள் நம்ம நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 2 ஆயிரம் வருசங்களுக்கு முன்பே இந்தியாவில் மிளகு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எகிப்து நாட்டில் கிமு 1200 காலகட்டத்திலேயே மிளகு பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. ஆனால் அங்கு மசாலாவுக்காக பயன்படுத்தவில்லையா? பிறகு எதற்கு என்கிறீர்களா? எகிப்துல என்னங்க பேமஸ்? ஆமா, கரெக்ட். மம்மிதான். இறந்த உடல்களை பதப்படுத்த மிளகைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் எகிப்தியர்கள். கிமு 1000 காலகட்டத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு மிளகு அனுப்பிவைக்கப் பட்டதாகவும் ஒரு தரவு இருக்கிறது. கர்நாடகா தொடங்கி கன்னியாகுமரி வரையிலான மலபார் கடற்கரையில் மிளகு குறித்த பல்வேறு நாட்டுப்புறக் கதைகள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. அவையெல்லாம் மிளகின் பழமை, பண்டைக்கால வரலாற்றிற்கு சான்று பகர்வது போல் விளங்குகின்றன. மிளகு சாகுபடி செய்யப்படும் தோட்டங்களை டிராகன்களும், வேறு சில அமானுஷ்ய சக்திகளும் பாதுகாத்தன என்றும் சில கதைகள் உண்டு. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமியான ரோமில் உள்ள பல பகுதிகளில் கறுப்பு மிளகு ஒரு அடையாளமாகவே கருதப்பட்டது.

நாணயத்தில் கூட மிளகு பொறிக்கப்பட்டது. பழங்காலத்தில் இந்தியாவின் மலபார் கடற்கரையில் இருந்து மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அங்குள்ள மக்கள் விரும்பி பயன்படுத்தி இருக்கிறார்கள். ரோமில் இருந்து மிளகைக் கொண்டு செல்வதற்காக பெரிய பெரிய கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்து சென்றுள்ளன. அந்தக் கப்பல்கள் டன் கணக்கிலான மிளகை ரோமுக்கு கொண்டு சென்று சேர்த்தன. ரோமானியப் பேரரசு வீழ்ச்சி கண்ட பிறகு இந்தியாவுக்கும், ரோமுக்கும் இடையிலான மிளகு வர்த்தகத்தில் குழப்பம் நிலவி இருக்கிறது. இன்றளவும் போர்த்துக்கீசியர்கள், பிரிட்டிஷ்காரர்களின் உணவு வகைகளில் மிளகின் ஆதிக்கமே மிஞ்சி இருக்கிறது. ஒரு கட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மிளகு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது உலகின் மொத்த மிளகு வர்த்தகத்தில் 70 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. இதுமட்டு மல்ல, இந்தியாவில் மிளகு குறித்து இன்னும் பல ஆச்சரியத் தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. அக்பரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் புத்தகத்தில் கூட மிளகு குறித்த குறிப்பு இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு முக்கிய நூல்களில் மிளகு குறித்து எழுதி வைத்திருக்கிறார்கள்.

கடல்வழியாக பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா இந்தியாவை அடைந்த பிறகு, இங்குள்ள மசாலாப் பொருட்களின் சிறப்புகள் குறித்தே அதிக தேடலில் இறங்கி இருக்கிறார். இப்போது நாம் குழம்பு, வறுவல் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மிளகாய் (chilli) தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. இத்தகைய மிளகாய் 16ம் நூற்றாண்டில்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறது. மிளகாயின் வருகைக்குப் பிறகு மிளகுக்கு கொஞ்சம் மவுசு குறைந்திருக்கிறது. ஆனாலும் அது தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைக்க மறக்கவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை கேரளாவில்தான் முன்பு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் அதிகளவில் உற்பத்தி செ்யப்பட்டது. இதனால் இந்தியாவில் மிளகு விளையும் மாநிலத்தில் கர்நாடகாவுக்குத்தான் முதல் இடம். இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தியில் 36 சதவீதம் கர்நாடகாவைச் சேர்ந்ததுதான். நம்ம தமிழ்நாட்டு மிளகுக்கும் உலகளவில் நல்ல பெயர் இருக்கிறது. தற்போது இந்தியாவில் பயிரிடப்படும் மிளகு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது பல உணவுகளில் மிளகு முக்கிய இன்கிரிடென்ட். அது மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவப் பயன்பாட்டுக்கும் மிளகு தனது பங்களிப்பை அளித்து வருகிறது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்