Saturday, September 14, 2024
Home » மக்களை முன்னேற்றிடும் வருவாய்த்துறை பணிகள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு: ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை பட்டா

மக்களை முன்னேற்றிடும் வருவாய்த்துறை பணிகள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு: ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை பட்டா

by Karthik Yash

* 3 ஆண்டுகால ஆட்சியில் மொத்தம் 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழக மக்களை முன்னேற்றிடும் வருவாய்த்துறை பணிகள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட மொத்தம் 2.75 கோடி சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வருவாய்த்துறை பொது நிர்வாக துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பேரிடரின்போது பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்குதல், அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி கொடுத்தல், அரசு நிலங்களை பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலச் சீர்திருத்த சட்டங்களை செயல்படுத்துதல், அரசு நிலத்தை தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குதல், பட்டா மாறுதல் செய்கின்ற நிலத்தின் எல்லைகளை அளந்து காட்டுதல் இதுபோன்ற செயல்களை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற பணிகளையும், பொதுத்தேர்தல் நடத்துகின்ற பணிகளையும் வருவாய்த்துறை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதுமுதல் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு 6 லட்சத்து 52 ஆயிரத்து 559 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியுள்ளார். முதல்வர் உருவாக்கிய எங்கிருந்தும் எப்போதும் இணையம் வழி பட்டா மாறுதல் திட்டம் பொதுமக்கள் இணையம் வாயிலாக எந்நேரமும் எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் 23.9.2022 அன்று தொடங்கி வைத்தார். இரண்டு ஆண்டுகளில் 41 லட்சத்து 81 ஆயிரத்து 723 பட்டா மாறுதல்கள் இணையம் வழி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன. கையினால் தயாரிக்கப்பட்ட பழைமையான ஆவணங்களை ஒளி பிம்ப நகலெடுத்து பராமரிக்கும் பணி சென்னையில் உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகத்தில் நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளில் 9,40,725 தாள்கள் ஒளி பிம்ப நகலெடுத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இணையதளம் மூலமாக 26 வகையான சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டு, இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 2 கோடியே 75 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்பதை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 16.12.2023 முதல் 18.12.2023 வரை பரவலாக கனமழை முதல் அதி கனமழை பொழிவு ஏற்பட்டது.

வழக்கத்திற்கு மாறான கனமழை மற்றும் அதனை தொடர்ந்த வெள்ளம் காரணமாக மனித உயிரிழப்புகள், கால்நடை இறப்பு ஆகியவை ஏற்பட்டதோடு, வீடுகள்,குடிசைகள், வேளாண் தோட்டக்கலை பயிர்கள், சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வழங்கல் போன்ற பொது உட்கட்டமைப்புகளுக்கும் பெருத்த சேதங்கள் ஏற்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் ஆகியவற்றிற்கு ரூ.2476.89 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கினார். மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட 29,54,269 குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூ.6,000 வீதம் வாழ்வாதார நிவாரணம் ரூ.14.86 கோடியும், மிக்ஜாம் புயல் – நிவாரணம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களுள் தகுதியான 2,68,869 குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 வீதம் ரூ.39.51 கோடி வாழ்வாதார நிவாரணமாகவும், மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1.15 கோடியும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.48.18 கோடியும் நிவாரணமாக உடனுக்குடன் வழங்கினார்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட 6,63,760 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 மிதமாக பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.1,000 வீதம் ரூ.541.37 கோடி வாழ்வாதார நிவாரணமாக வழங்கினார். தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான நிவாரணமாக ரூ.201.67 கோடியும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.130 கோடியும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மீன் பிடி படகுகள், வலைகள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.28.10 கோடியும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவேகமாக உடனுக்குடன் செயல்பட்டு அதிகாரிகளை அரவணைத்து களத்தில் தாமும் நின்று ஆற்றிய பணிகளை பாதிப்புக்காளான மக்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் வெகுவாக பாராட்டினர்.

பதிவுத்துறையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. உரிய முறையில் இணையத்திலும் பதிவு செய்து கொடுக்கப்படுகின்றன. ஒருவர் இரண்டு ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி விற்பனைக்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மனைகள் போட்டிருந்தால் விற்பனை செய்யப்படும் மனைகளை பதிவு செய்யும்போது மனை வாரியாக பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. முன்பு ஒரு மனை வாங்கினால் துறை அதிகாரி அந்த இடத்திற்கு சென்று அளந்து கொடுக்க வேண்டும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து பணிகளையும் எந்தெந்த முறையில் எளிதாக்க இயலுமோ அந்தந்த முறைகளில் துறையை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய்த் துறையை மேம்படுத்தியுள்ளார் என்பது பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்றாகும்.

இப்படி, ஆட்சி ஏற்பட்ட மூன்று ஆண்டுகளில் வருவாய்த்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரித்துறை, கள ஆய்வில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா முதலான பல புதுமையான திட்டங்களால் மக்கள் குறைகள் மனு வழங்கிய 15 நாள்களில் தீர்க்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர். மற்ற மாநிலங்களுக்கும் திராவிட மாடல் அரசின் வருவாய்த்துறை சீரிய முறையில் வழிகாட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் எந்தெந்த முறையில் எளிதாக்க இயலுமோ அந்தந்த முறைகளில் துறையை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய்த் துறையை மேம்படுத்தியுள்ளார் என்பது பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்றாகும்.

You may also like

Leave a Comment

17 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi