ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் யாரையும் வாடா, போடா என்று அழைக்கக்கூடாது: போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ரினிஷ். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலக்காட்டை சேர்ந்த வக்கீலான அக்விப் சுகைல் என்பவர் விபத்தில் சிக்கிய ஒரு வாகனத்தை மீட்பதற்காக நீதிமன்ற உத்தரவுடன் காவல் நிலையத்திற்கு சென்றார்.அவரை சப் இன்ஸ்பெக்டர் ரினிஷ் ஆபாசமாகத் திட்டி மிக மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், 19ம் தேதி (நேற்று) காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நேற்று விசாரணை நடைபெற்றது. டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, வக்கீலிடம் மோசமாக நடந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் ரினிஷ் எச்சரிக்கை செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று டிஜிபி தெரிவித்தார்.

இதன்பின் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறியதாவது, “இதற்கு முன்பு பணிபுரிந்த காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதால் தான் ஆலத்தூருக்கு அவர் மாற்றப்பட்டார்.எனவே இடமாற்றம் செய்வதால் எந்தப் பலனும் ஏற்படாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தான் எஜமானர்கள். யாரையும் வாடா, போடா, நீ என்று அழைக்கக் கூடாது. இது தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி மீண்டும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறினார்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்