ராசிபுரம் அருகே நள்ளிரவில் நிழற்கூடத்தில் ஜீப் மோதி வனவர் உள்பட 3 பேர் பலி

சேந்தமங்கலம்: ராசிபுரம் அருகே, நள்ளிரவில் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தில் ஜீப் மோதியதில் வனவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(43), விவசாயி. கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளத்திபாறை ஊர்வலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்(43), மர வியாபாரி. ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் ரகுநாதன்(40). இவர் கொல்லிமலை வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தார். இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் இரவு, ஜீப்பில் கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் புறப்பட்டனர்.

பேளுக்குறிச்சி அருகே மோளப்பாளையம் பகுதியில், நள்ளிரவு 11.30 மணி அளவில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் சிக்கி 3பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து பேளுக்குறிச்சி போலீசார் சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிந்து மூவரும் நள்ளிரவில் எதற்காக ராசிபுரம் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த வனவர் ரகுநாதன் உடலுக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கலெக்டர் உமா மற்றும் அரசு அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related posts

ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை: அரசு ஆலோசிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் அகற்றம்..!!

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை