குறி சொல்லும் சாக்கில் மக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் ஆன்மிக அரசியல்வாதி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒரே பெயரில் இருப்பவங்களுக்கு தாமரை கட்சியில் பதவி கொடுப்பதால யாரு பதவில இருக்காங்க.. இல்லைன்னு தெரியாமல் நிர்வாகிங்களே குழப்பத்துல தவிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியில வெயிலூர் வடக்கு மண்டலத்தில் ஒருவருக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனா, அவரு போலியாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றுவதாகவும், காட்டுப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலயே ஆபிஸ் வச்சு கட்டப்பஞ்சாயத்து செய்றதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைச்சு கடந்த ஆண்டு விசாரணை நடத்துனாங்க.. உடனே நமக்கு எதுக்கு வம்புன்னு கட்சி தலைமை அவர எப்பவோ கட்சியில இருந்து நீக்கிட்டதா சொல்லி நிர்வாகிங்க ஒதுங்கிட்டாங்க.. அதோடு அவரு பதவியையும் பறிச்சிட்டாங்களாம்.. ஆனா அந்த பதவி, ஏற்கனவே நீக்கப்பட்டவரின் பெயரில் இருக்குற வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுருக்கு..
இதுக்கிடையில வடக்கு மண்டல தலைவர் பதவி பறிக்கப்பட்டவரு, சமீபத்துல நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுல லகரங்களை அள்ளி வீசி இருக்குறாரு.. மேலும் தற்போது பதவியில உள்ளவரும் அவரது பெயரில் இருக்குறதால நோட்டீஸ்ல பெயருக்கு பின்னால அந்த பதவியை போட்டுக்கிட்டாராம்.. இந்த நோட்டீஸ் அடிச்சவங்க தாமரை நிர்வாகிங்க சிலருக்கு கொண்டு போய் கொடுத்து அவரது லீலைகளை போட்டு கொடுத்துட்டாங்களாம்.. இப்போ யாரு பதவியில இருக்குறாங்கன்னு தெரியலையேன்னு தாமரை நிர்வாகிங்க குழப்பத்துல இருக்காங்களாம்.. தாமரை நிர்வாகிங்க யாராவது குற்ற வழக்குல சிக்குனா, அவரு கட்சியிலயே இல்லையேன்னு உடனே கழட்டிவிடுவது மட்டுமல்லாமல், வேறு ஒருவரை கை காட்டுவதற்காக பல இடங்கள்ல ஒரே பெயரில் இருக்குறவங்களுக்கு பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவிட்டு இருக்கு.. இப்போ வெயிலூர்ல இந்த விநாயகர் சதுர்த்தி நோட்டீஸ் மேட்டர்தான் ஹாட் டாப்பிக்கா போய்க்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குறி சொல்ற சாக்கில் மக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் ஆன்மிக அரசியல்வாதி மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்கிறார்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தின் மரியாதையில் துவங்கும் தாலுகாவில் தூர் என முடிகிற ஊரில் உள்ள ஒரு கோயில் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் இலைக்கட்சியின் கிளை செயலாளர் இருந்து வருகிறாராம்.. இவர் தனது வீட்டில் தினமும் 100 பேருக்கு மேல் குறி சொல்லி வருகிறாராம்.. மேலும், கோயிலில் கிடா வெட்டி சூப்பு போடும் பூஜை நடத்துகிறாரு… பிள்ளை வரும் கேட்டு வரும் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும், நாடி வருவோரின் பொருளாதார நிலையறிந்து, 10 பவுன் முதல் 100 பவுன் வரை நகைகளை கேட்டு பறித்தும் விடுகிறாராம்… இதில் பாதித்த யாராவது காவல்நிலையத்தை அணுகினாலும், கடந்த காலத்து இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகள் துணையோடு கட்டப்பஞ்சாயத்தில் சமரசம் பேசி வெளியில் வந்து விடுகிறாராம்.. கோயிலில் நேர்த்திக்கடனுக்கு வெட்டும் கிடாவுக்கு ரூ.5 ஆயிரம், ஒரு சேவலுக்கு ரூ.2 ஆயிரம்னு கட்டாய வசூல் நடத்திக்கிட்டு இருக்கிறாராம்.. இப்பகுதி மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் பண்ணும் இவர் குறித்த புகார்களை உயர்மட்ட மாநில அதிகாரிகளுக்கு இப்பகுதியினர் அனுப்பி வைத்து காத்திருக்கிறார்களாம்.. இப்படிப்பட்ட போலி ஆன்மிக அரசியல்வாதி மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரிந்து நிக்கும் மூணுபேரையும் ஒரே ரேஞ்சில்தான் சேலத்துக்காரர் வச்சிருக்காருன்னு அடிபொடிகள் அடிச்சு சொல்றாங்களே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திசைக்கொரு பக்கம் பிரிஞ்சு நிக்கும் ரத்தத்தின் ரத்தங்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து, இலைகட்சியை ஒருங்கிணைப்பேன்னு சின்னமம்மி புறப்பட்டிருக்காங்க.. இந்த ஒர்க்கை குறிப்பிட்ட மாசத்துக்குள் முடிச்சிருவேன்னு ஸ்டேட்மென்ட் வேற குடுத்திருக்காங்க.. இதுவெல்லாம் அவரை நம்பியிருக்கிற ஒன்றிரண்டு பேருக்கு குடுக்கிற பூஸ்ட் மட்டுமே. அவுங்களுக்கும் இலைகட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லீங்க என்று நக்கலடிக்கிறாங்களாம் சேலத்து லீடரின் அடிப்பொடிகள். ‘மம்மியின் மறைவுக்கு பிறகு எல்லா தேர்தலிலும் போட்டி போட்டிருக்கோம்.. குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை குவிச்சிருக்கோம்.. தேர்தல் ஆணையமும், தொண்டர்களும் எங்க ஜெனரல் செகரட்டரியை மட்டுமே ஏத்துக்கிட்டு இருக்காங்க.. இடையில் அவுங்க வந்து நான்தான் ஜெனரல் செகரட்டரி என்று குறுக்குசால் ஓட்டிக்கிட்டு இருக்காங்க.. இதுவெல்லாம் பார்த்துக்கிட்டும் எங்க ஜெனரல் செகரட்டரி எந்த ரியாக் ஷனும் குடுக்காமா இருக்காருன்னா என்ன அர்த்தம்.. அவுங்களை எல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கலைன்னுதான் அர்த்தம்.. இதே ரேஞ்சில் தான் தேனிக்காரரையும், குக்கர் பார்ட்டியையும் எங்க லீடரு வச்சிருக்காரு.. ஆனா இதையெல்லாம் அந்த மூணுபேரும் புரிஞ்சுக்கிட்ட மாதிரியே தெரியலீங்கன்னு சொல்றாங்க சேலத்துக்காரரின் அடிபொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்