அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 7 ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், கழிவறை குழாய்கள் உடைந்து கழிவு நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சாலை அமைக்க வேண்டும் என்று கோரி வந்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம், சமரசம் பேசி அப்புறப்படுத்தினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த செரப்பணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் இந்த குடியிருப்பு வாசிகள் ரூ.35 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளனர். அதை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு சாலை, அடிப்படை வசதி செய்து தர முடியும் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்க முடியாத உங்களுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும். நீங்கள் அடிப்படை வசதியை முழுமையாக செய்து கொடுத்துவிட்டு பிறகு வரி வசூலிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் பொதுமக்களை சமாதானம் பேசி ஊராட்சி மன்ற தலைவரை அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள்!

அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு!

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்