அதிமுக பகுதி செயலாளர் கொலையில் 10 பேர் கைது

சேலம்: அதிமுக பகுதி செயலாளர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்தனர். சேலம் தாதகாபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (62). கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர். முன்னாள் மண்டல குழு தலைவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் தாதகாபட்டி அம்பாள் ஏரி ரோட்டில் உள்ள தனது அலுவலகம் வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்றார்.

மாரியம்மன் கோயில் 4வது தெருவில் சென்றபோது, எதிரே 2 பைக்கில் வந்த 4 பேர் கும்பல் சண்முகத்தை வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சண்முகத்தை கொடுவாள், கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்கும் வரையில் உடலை எடுக்கவிட மாட்டோம் என உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினர்.

சமரசம் செய்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சண்முகத்தை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல், 10 நாட்களாக அவரது நடமாட்டத்தை நோட்டமிட்டு, இரவில் தனியாக பைக்கில் வருவதை அறிந்து, அந்த இடத்தில் இருக்கும் 2 மின்கம்பங்களின் டியூப் லைட்டுகளை எரியவிடாமல் செய்து, இருட்டில் கொலையை அரங்கேற்றியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

கொலையான சண்முகத்திற்கு மாநகராட்சி டெண்டர் எடுப்பது தொடர்பாகவும், அங்குள்ள கோயில் டிரஸ்ட் நிர்வாகம் தொடர்பாகவும் சிலருடன் முன்பகை ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக இக்கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சண்முகத்தின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. காலை 10.30 மணியளவில் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் தயாராக இருந்தனர்.

ஆனால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ‘இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான சதீஷை கைது செய்தால்தான் உடலை பெற்றுக்கொள்வோம்’ என்றனர். இதனிடையே சதீஷ்குமார் (44), நிலவாரப்பட்டி அருண்குமார்(28), மூணாங்கரடு முருகன்(23), தாதகாபட்டி தாகூர்தெரு பாபு(45), தாதகாபட்டி சீனிவாசபெருமாள்(22), மூணாங்கரடு பூபதி(22), அம்பாள்ஏரி ரோடு கருப்பண்ணன்(எ)சந்தோஷ்(31), நவீன்(25), தாதகாப்பட்டி கவுதம்(33), மணிமாறன் (33) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்து கொலை செய்யப்பட்ட சண்முகம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது சமரசத்தை ஏற்று உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு