சட்டப்பேரவை நிகழ்வுகளை காண பார்வையாளர் மாடத்தில் 10,754 பேருக்கு அனுமதி: பேரவை தலைவர் அப்பாவு தகவல்

சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 12-2-2024ல் பேரவைக் கூட்டம் தொடங்கியது முதல் 29-6-2024 வரை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட மொத்த வினாக்கள் 13,658. அவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வினாக்கள் 116. துணை வினாக்கள் 336. சிறப்புக் கவன ஈர்ப்பாக 2 எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தார். இதில் 19 உறுப்பினர்கள் 1 மணி 47 நிமிடங்கள் பேசினார்கள். தகவல் கோரல் என்ற முறையில் அவ்வப்போது அவையில் 6 முக்கிய பிரச்னைகள் எழுப்ப அனுமதிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

முக்கிய தீர்மானங்கள் 1. 2026க்கு பிறகு மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிடுதல் அல்லது 1971ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானம் மற்றும் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானம் 14-2-2024 அன்று நிறைவேற்றப்பட்டன.

அதேபோன்று, இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதால், 2021ம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானம் 26-6-2024 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

3வதாக நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளி கல்வியில் மாணவர்கள் பெறும் 12வது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானம் 28-6-2024 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 அறிவிப்புகளை படித்தார். 12-2-2024 முதல் 29-6-2024 வரை பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து நாட்களும் பேரவைக்கு 72 உறுப்பினர்கள் வந்துள்ளனர். பார்வையாளர்கள் மாடத்தில் மொத்தம் 10,754 பேர் அனுமதிக்கப்பட்டனர். முதல் மற்றும் இரண்டாம் கூட்டத் தொடர்களில் சட்டமன்ற நூலகத்திற்கு வருகை தந்தோர் 77. வழங்கப்பெற்ற நூல்கள் 199.

பேரவையை ஜனநாயக முறையில் நடத்திட எனக்கு பேருதவியாக இருந்த முதல்வருக்கு என்னுடைய சார்பாகவும், உங்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சிவசங்கரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கயல்விழி ஆகியோர் முதல் ஐந்து நிலைகளில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்