பெண்ணையாறு விவகாரத்தில் அவகாசம் கொடுத்தும் புதிய நடுவர் மன்றம் அமைக்காதது ஏன் ? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் பல முறை அவகாசம் கொடுத்தும் புதிய நடுவர் மன்றத்தை அமைக்காதது ஏன் என ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்து இருந்தது. இறுதியாக பெண்ணையாறு தொடர்பான வழக்கு கடந்த மே 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூன்று மாதத்தில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்’’ என்று ஒன்றிய அரசுக்கு திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர், ‘‘பெண்ணையாறு விவகாரத்தில் அவகாசம் கொடுத்தும் தற்போது வரையில் புதிய நடுவர் மன்றத்தை அமைக்காமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு செய்து வருகிறது.

குறிப்பாக இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒன்றிய அரசு மிகவும் மெத்தனமாகவே இருந்து வருகிறது’’ என்ற குற்றச்சாட்டை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தனர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாசீம் குதாரி, ‘‘கர்நாடகாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது புதியதாக அமைந்துள்ள அரசிடம் பெண்ணையாறு விவகாரம் தொடர்பான அவர்களது நிலைப்பாட்டை கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அடுத்த ஓரிரு நாளில் அம்மாநில முதல்வரிடம் இருந்து பதில் கிடைத்து விடும். அதன் பிறகு நாங்கள் எங்களது தரப்பு விளக்கங்களை பதில் மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். அதுவரையில் கால அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய், ‘‘கர்நாடகா மாநிலத்தில் பழைய அரசு இருந்தது, புதிய அரசு அமைந்துள்ளது என்ற விளக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. பெண்ணையாறு விவகாரத்தில் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டும் புதிய நடுவர் மன்றம் அமைக்காதது ஏன்?. நீங்கள் ஒன்றிய அரசாக இருந்து நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் எங்களது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. குறிப்பாக பெண்ணையாறு என்ற நதி கர்நாடகா மாநிலத்தில் துவங்கி, தமிழ்நாட்டின் உள்ளே நுழைந்து, இறுதியாக புதுவை மாநிலத்தை தொட்டுக்கொண்டு கடலில் கலக்கிறது. இப்படிப்பட்ட நீர் பங்கீடு விவகாரத்தை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் காட்டுவது ஏன்’’ என ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மாநிலத்தின் நிலைப்பாட்டை கேட்டறிந்து அடுத்த ஒரு வாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒன்றிய அரசு தனது விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இதில் கால அவகாசம் வழங்க முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘பெண்ணையாறு தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என உத்தரவிட்டார்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை