கூழாங்கல்

நன்றி குங்குமம் தோழி

பிரிந்து சென்ற மனைவி மேல் கோபம் கொண்டு அந்த பெண்ணை அடிப்பதற்காக செல்லும் ஒரு ஆணின் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. இந்தப்படம் சினிமா திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறது. மூன்று மணி நேரமே நடக்கும் கதை தான் என்றாலும் அதை அழகாக ஆண்களின் அக உணர்வுகளையும் பெண்களின் வாழ்வியலையும் ஒருசேர காட்டி ஒரு நல்ல உரையாடலை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ்.

படத்தின் தொடக்கத்தில் தன்னுடைய மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு கோபமாக அவரது மனைவியை தேடி போகும் காட்சியிலிருந்து படம் முடியும் கடைசி காட்சி வரை பெண்களின் வாழ்வியலை மையமிட்டே கதை நகர்கிறது. பேசாதே காட்டு என்பது தான் சினிமாவின் திரைமொழி. அதற்கேற்ப படத்தின் வசனங்களும் மிகக் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியுமே படத்தின் கதைக்கு பலம் சேர்க்கிறது. படத்தின் நாயகன் நடந்து செல்லும் பாதையில் எதிர்படும் பெண்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

வாசல் கூட்டி வீட்டை சுத்தப்படுத்துவது, அரிசியில் கல் பொறுக்கி கொண்டிருக்கும் பாட்டி, மாடு மேய்க்க செல்லும் பெண், சந்தைக்கு காய்கறிகள் வாங்க செல்லும் பெண்கள், அடுப்பெரிக்க விறகு சுமந்து செல்லும் பெண்கள், குழந்தையை பராமரித்துக் கொள்ளும் பெண், தண்ணீர் சுமந்து செல்லும் பெண்கள் என படம் முழுக்கவும் பெண்கள் ஏதாவதொரு வேலையை செய்து கொண்டு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் தங்களுக்காக செய்து கொள்வதில்லை. முழுக்க தங்களுடைய குடும்பத்திற்காக செய்யும் வேலைகளாக உள்ளது. தங்களுடைய சுயம், கனவு என இரண்டையும் மறந்து குடும்பத்திற்காக எந்நேரமும் வேலை செய்கிறவர்களாக த்தான் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்வு எல்லாமே அவரின் கணவருக்காகவும் தங்களுடைய குழந்தைகளையும் வீட்டையும் பராமரித்துக் கொள்வதிலேயே முடிந்து போகிறது என்பதைதான் இந்த படம் பேசுகிற முக்கியமான விஷயம்.

இதில் ஆண்களின் வாழ்வியலையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். இந்த சமூகம் எப்படி ஆண்களால் கட்டமைக்கப்பட்டு அவர்களுடைய சொகுசான வாழ்க்கைக்காக பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை ஆண்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் அதேேபால் பெண்களின் அந்த நாள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை படம் முழுக்க காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆணை மையமாக வைத்து இந்த சமூகம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தான் இந்த படம் பேசுகிறது.

இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருத்தடையான், பள்ளி சிறுவனாக நடித்திருக்கும் செல்லப்பாண்டி கதாபாத்திரம் தொடங்கி படத்தில் வந்து போகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமான தேர்வுகள். இந்த கதை நிகழ்கிற இடமும் இங்கு மக்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் வெளிப்படுத்துகிற ஒரு வெக்கை நிறைந்த இடமாக அமைந்திருக்கிறது. அதை அழகாக படமெடுத்திருக்கும் விதமும் படத்தின் கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே கதை சொல்கிறது எனலாம். முக்கியமாக பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். அதில் நடித்திருக்கும் நடிகர்களும் அங்கு வாழும் மக்களின் உடல் மொழியை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பேருந்தில் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் ஆண்களின் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை சாதாரணமாக பார்ப்பவர்கள் கூட ஒரு குழந்தையின் அழுகையை தொந்தரவாக பார்க்கிறார்கள். தங்களுடைய அப்பா, அம்மாவின் பிரச்னையை எப்படி அணுகுவது என தெரியாமல் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி வசனங்களே அதிகமாக இல்லாமல் தன்னுடைய தங்கையை பார்க்க போகிற சிறுவனின் ஏக்கத்தை அந்த சிறு வயதிற்கே உண்டான உணர்வுகளோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

எலிக்கறி சாப்பிடும் நிலையில் குடும்பத்தில் இருக்கும் சிறுமி தனக்கான உணவு தயாரானவுடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக காய்ந்த போன இலைகளை எடுத்து தன் மீது தூவி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவாள். ஒரு வேளை உணவு என்பது எவ்வளவு ஆடம்பரமானது என்பதை தான் அந்த சிறுமியின் மகிழ்ச்சி வெளிப்படுத்தும். எளிய மக்களுக்கு அடிப்படையான விஷயமான உணவு கிடைக்கவே எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் அந்த உணவு என்பதே ஆடம்பர பொருளாக இருக்கிற நிலையில்தான் பல குடும்பங்கள் இருக்கின்றன. கணவர்களின் பொறுப்பு, என்பது சம்பாதிப்பதோடு நின்று போகிறது.

அதை தாண்டி வீட்டின் பொறுப்பு, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, சமைப்பது, வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவது என அனைத்தையுமே பெண்களே செய்கிறார்கள். நாள் முழுவதும் குடித்துவிட்டு திரிந்து வீட்டிற்கு வந்ததும் தண்ணீர் குடிக்கும் கணவருக்கும் அந்த ஒரு தண்ணீருக்காக நாள் முழுவதும் காத்திருந்து வீட்டிற்கு தண்ணீர் குடம் சுமந்து கொண்டு வரும் பெண்களின் வாழ்க்கையை பற்றி தான் இந்த கூழாங்கல் படம் பேசுகிறது. வீட்டிற்குள் நிறைய கூழாங்கற்களை சேமித்து வைத்திருக்கும் சிறுவன் அன்று நடக்கும் சண்டையிலும் கொண்டு வந்து ஒரு கூழாங்கல்லை வைத்து விட்டு செல்வான். இந்த மாதிரியான கூழாங்கல் எல்லோர் வீட்டிலும் இருக்கிறது என்பதுதான் இந்த கூழாங்கல் நமக்கு சொல்ல வரும் செய்தி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்