உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதால் லெபனானுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்கவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் காசா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலரும், இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இந்த அமைப்பும், இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள், வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடித்தது. இதில் 37 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது. இதனால் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கானோர் ராக்கெட் குண்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உள்பட பலர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா அமைப்பு, மீண்டும் இஸ்ரேல் மீது 150க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதற்கிடையே, லெபனான் மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகுவதாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் நடைபெற சாத்தியம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல், தனது வீரர்களிடம் தரைவழி தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி கூறுகையில், ‘லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு நாடு தயாராகி வருகிறது. ஈரானுடன் இணைந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நாம் செய்யும் எல்லாவற்றையும் பற்றி என்னால் விரிவாக பேச முடியாது. ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல முடியும். வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்றார்.

இதனால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, லெபனானுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், ஏற்கனவே லெபனானில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு

சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்