Tuesday, September 17, 2024
Home » ஆடும் மயிலில் வந்து ஆட்கொள்வாய்

ஆடும் மயிலில் வந்து ஆட்கொள்வாய்

by Porselvi

திருப்பம் தரும் திருப்புகழ்! -6

‘சரணம்! சரணம்! சண்முகா சரணம்!’ என்று இறைவன் திருவடி மலர்களை இறுகப் பற்றிக்கொண்டு பரிபூரண சரணாகதி அடைந்து விட்டால் அச்சமும், கவலையும், குழப்பமும் தம்மைவிட்டு அடியோடு அகன்று விடும்.பொதுவாக மனிதர்கள் அனைவர்க்கும் மரண பயம் என்பது அவ்வப்போது மனத்தில் வந்து ஆட்டிப் படைக்கிறது.சுவாமி விவேகானந்தர் தெளிவுபடக் கூறுகிறார்.
‘‘மனிதனே! நீ இவ்வுலகில் இருக்கும் வரை மரணம் உனக்கு வரப்போவதில்லை!

மரணம் உனக்கு நேரும் போது நீ
இவ்வுலகில் இருக்கப் போவதில்லை.
எனவே வீண் அச்சத்தை விட்டுவிடு!
கந்தர் அனுபூதியிலும், அலங்காரத்திலும்,
திருப்புகழிலும் அருணகிரிநாதர்
`மொழிகின்றார்.

‘‘கார்மா மிசைக் காலன் வரில் கலபத்து
ஏர்மா மிசை வந்து எதிரப் படுவாய்!’’
‘அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்
‘அஞ்சல்’ என வலிய மயில் மேல் நீ
அந்த மறலியொடு ‘உகந்த மனிதன்
நமது அன்பன்’ என மொழிய வருவாயே!’

ஆடும் மயிலில் வந்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும். என திருப்பரங்குன்றத் திருப்புகழான ‘உனைத் தினம் தொழுதிலன்’ என்று தொடங்கும் பாடலிலும் மனம் உருகி நமக்காக நெஞ்சம் நெகிழ்ந்து வேலவனிடம் அவர் வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘உனைத் தினம் தொழுதிலன், உனது
இயல்பினை
உரைத்திலன், பலமலர் கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன், ஒருதவம் இலன் உனது
அருள்மாறா

உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன்புகழ் துதி செய
விழைகிலன் மலைபோலே

கனைத்தெழும் தேடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே

கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அலம் உறுபொழுது அளவைகொள்
கணத்தில் என்பயம் அறமயில் முதுகினில்
வருவாயே!’’

இறைவனை வழிபடும் முறைகளை இப்பாட்டில் விவரிக்கிறார் அருணகிரிநாதர்.மனதார முருகப்பெருமானை வேண்டிய படி இருகைகளையும் தலைக்கு மேலும், நெஞ்சத்திற்கு நேராகவும் கூப்ப வேண்டும்.‘கைகாள் கூப்பித் தொழீர்’ என அப்பர் தேவாரமும்,‘சென்னியில் அஞ்சலி கூப்பினர்’ என திருவாசகமும் மொழிகின்றன.ஆறறிவு கொண்ட மனிதர்களாக தாம் உலகில் பிறந்திருக்கின்றோம். பறவைகளாகவோ, கால் நடைகளாகவோ நாம் பிறந்திருந்தால் உலக இன்பங்களை அனுபவிக்க முடியுமா?

எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவி தான்
யாதினும் அரிது அரிது காண்!
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?

என சிந்தித்து நன்றி உணர்வோடு எந்நேரமும் இறைவனின் பேரருளை வணங்க வேண்டும்.தெய்வத்தின் பெருமைகளையும், அடியவர்கட்கு அருளிய நிகழ்வுகளையும் நாவார எடுத்து உரைக்க வேண்டும்.தலைதாழ்ந்து வணங்கியும், வாயார அவன் புகழ் பாடியும் பலமலர்கள் கொண்டு அவன் திருவுருவைத் தொழுது ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு! நீர் உண்டு!
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்!
எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே!
என திருமந்திரத்தில் திருமூலர் பாடுகின்றார்.

இறைவனை தினம் வணங்குவதும், அவன் அருமை பெருமைகளை பலர் அறிய விரித்துரைப்பதும், பல்வேறு பூக்களால் அவன் திருஉருவைப் பணிந்து பூஜை செய்வதும், அவன் அருளாலே அவனை மனதில் தியானிப்பதும் அவன் அடியார்களைப் போற்றிப் பாதுகாப்பதும், அவன் உறையும் ஆலயத்தையும், மலையையும் வலம் வருவதும் ஆகிய எச்செயல்களுக்கும் என் நேரத்தை செலவிடாது பொன்னான பொழுதை மண்ணாக்கிவிடுதல் ஆறறிவு பெற்ற மாந்தருக்கு அழகா? என இத்திருப்புகழில் மனம் உருகி உரைக்கின்றார் அருணகிரிநாதர்.

உனைத் தினம் தொழவில்லை, உன் புகழ் ஓதவில்லை, உன் ஆலயம் வலம் வரவில்லை என்று தன்னைத் தானே நொந்து கொள்வது போல் அருணகிரியார் இத்திருப்புகழில் கூறுகிறார்.
அவரா ஆலயத்தை வலம் வரவில்லை?

ஆண்டவனின் பல தலங்களை பதினான்காம் நூற்றாண்டிலேயே வாகன, சாலை, வசதிகள் இல்லாத அக்காலத்திலேயே தேடிச் சென்று, நாடி நின்று பாடி மகிழ்ந்த பக்த சிகாமணி அல்லவா அருணகிரியார்!தொழுதிலன், உரைத்திலன், வலம் வருகிலன் என்று பிறர் குற்றங்களைத் தன் மேல் போட்டுக் கொண்டு நமக்காக அவர் பிரார்த்தனை புரிகிறார்.
எனவே தான் ‘கருணைக்கு அருணகிரி’ என அவர் போற்றப்படுகிறார்.இத்திருப்புகழின் முடிவிலே ‘யார்யார் வடிவேலனை வணங்கி உய்வு பெற்றார்கள்’ என்பதைப் பொருத்தமாக புகலுகின்றார்.

‘தினத்தினம் சதுர்மறை முனி முறை கொடு
புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயும் முனிவரர் தொழ மகிழ்வோனே!’

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பிரம்மனும், சாந்தமே வடிவான எண்ணற்ற முனிவர்களும் அன்றாடம் அபிஷேகம் செய்து ஆயிரக்கணக்கான பூக்களால் அர்ச்சனை செய்து, திருமுருகா! உன்னை வழிபாடு செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மேவிய சரவணக் கடவுளே!
தங்களை வழிபாடு செய்வதற்காகவே இக்குன்றத்தில் பார்க்கும் இடமெல்லாம் பசுஞ்சோலைகள் நிறைந்துள்ளன.அடியேன் மீது தங்களின் அருட்பார்வை விழவேண்டும்! கருவி கரணங்கள் எல்லாம் செயல் அழிந்து, என் உள்ளம் மெலிந்து என் உணர்வு கலங்குகின்ற இறுதிக்காலத்திலே ‘அஞ்சாதே’ என அபயம் அளித்து வினாடி நேரத்திலே ஆடும் மயில் வாகனத்தில் ஆரோகணித்து எனக்குத் தாங்கள் அபயம் தர வேண்டும்.

‘‘கணத்தில் என் பயம் அற
மயில் முதுகினில் வருவாயே!’’

கரிய பெரிய எருமையில் எமன் வந்து என் உயிரைப் பற்றும் அவ்வேளையில் அரிய, உரிய மயிலில் வந்து எளியேனைக் காப்பாற்றி அருள வேண்டும்.
எண்ணற்ற அசுரர்களை அடியோடு அழித்து விண்ணுலகத் தேவர்களுக்கு வாழ்வளித்த முருகப் பெருமானே!அரை நிமிடம் கூட அலைகின்ற என் மனத்தை கட்டுப்படுத்தத் தெரியாத கடையனாகிய அடியேனிடம் கூட அளிப்பருங் கருணைகாட்டி ஆதரிக்கும் ஆறுமுகரே! அனுதினமும் தங்களை மறவாத நெஞ்சத்தை தாங்கள் தான் எனக்குத்
தந்தருள வேண்டும்.

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர்
புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடை
யோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ
மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண
பெருமாளே.

முதற் படைவீட்டில் கல்யாண கோலத்தில் திகழும் கந்தரே!
என் முடிவுக் காலத்தில் அருள் கூர்ந்து தாங்கள் வருகை தந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

You may also like

Leave a Comment

seventeen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi