கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.27.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சிவகங்கை: கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.27.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, அமராவதி புதூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பாரதி. இவர், தெலங்கானா மாநிலத்தில் ஒரு ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரத்னா. கடந்த 2020 டிசம்பரில் பாரதி அமராவதி புதூரில் வீடு வாங்குவதற்காக மும்பையைச் சேர்ந்த ‘ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்னும் நிறுவனத்தில் ரூ.22 லட்சம் கடனாக பெற்றார். அப்போது இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான திருச்சியில் உள்ள இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், பாரதியை பாலிசி எடுக்க வலியுறுத்தியுள்ளது. பாரதிக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர் செலுத்த வேண்டிய வீட்டு கடன் தவணையை காப்பீட்டு நிறுவனமே செலுத்தும். மேலும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தலா ரூ.ஒரு லட்சம் கிடைக்கும் என பாலிசி எடுக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஏப்ரலில் பாரதி கொரோனா தொற்றால் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவர்கள் கொரோனா தொற்றால் இறந்தால் இன்சூரன்ஸ் சட்டத்தில் வராது என கூறி இழப்பீட்டு பணத்தை தர மறுத்தனர். இதையடுத்து ரத்னா சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம், உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் பாதிக்கப்பட்ட ரத்னாவிற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையாக ரூ.23 லட்சத்து 36 ஆயிரத்து 694, முறையற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாட்டுக்காக ரூ.2 லட்சம், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.27 லட்சத்து 46 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனமான திருச்சியில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு