நடைபாதையை சேதப்படுத்தி நடப்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது

தாம்பரம்: பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இருந்து பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளுக்கு செல்லும் சீனிவாசன் நகர் பகுதி மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்தாண்டு திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய மேம்பாலத்தின் அருகே காமராஜர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ள நடைபாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை உடைத்து, கடந்த 15ம் தேதி அங்குள்ள ஒரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் நடைபாதையை சேதப்படுத்தி மரக்கன்றுகள் நட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி மரக்கன்றுகளை நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன் நடைபாதையில் அனுமதியின்றி நட்டப்பட்ட மரக்கன்றுகளை அகற்றினர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நல சங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதியின்றி நடைபாதையை சேதப்படுத்தி மரக்கன்றுகள் நடத்தது குற்றம் என தெரிவித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அங்கிருந்து அகற்றப்பட்ட மரக்கன்றுகளை வேறு இடத்தில் நட்டு வைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி