டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக் கொலை: புறநோயாளிகள் போல் வந்த 2பேர் சுட்டுக்கொன்ற பயங்கரம்!!

டெல்லி: டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தென்கிழக்கில் ஜெயித்பூரில் நிமா என்ற தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 2 பேர் நோயாளிகள் என கூறிக்கொண்டு இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மருந்து சீட்டு வாங்குவதாக கூறி அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவித் அக்தரை சந்திக்க சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் டாக்டர் இருக்கும் அறைக்கு சென்றதும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டரை சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக மருத்துவமனை ஊழியர்கள் முதல் கட்டத் தகவலை பகிர்ந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சி பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்து வருகிறது. நோயாளிகள் என்ற பெயரில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் டாக்டரை சுட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே, கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்ற பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இரண்டு மாதங்களாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், அந்த போராட்டத்தின் எஈரம் காயும் முன்பே டெல்லியில் மருத்துவமனைக்குள் மேலும் ஒரு மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மருத்துவ பணியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு

மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு