பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி கார் நோக்கி காலணி வீசிய இருவர் கைது

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி கார் நோக்கி காலணி வீசியும், ஒழிக கோஷம் எழுப்பிய இருவரை கமுதி போலீசார் கைது செய்தனர். 10.5% இட ஒதுக்கீடு விவகாரம், சசிகலாவுடனான மோதல் போக்கு உள்ளிட்டவை காரணமாக முக்குலத்தோர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக நேற்று முன்தினம் மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் வந்தார். கமுதி அருகே உள்ள அபிராமத்தில் சிலர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வரக்கூடாது எனக் கூறி காரை வழிமறித்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், மறித்தவர்களை அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து பசும்பொன் நினைவாலயத்திற்குள் வந்ததும் வழிபாடு செய்வதற்காக வரிசையில் நின்ற பொது மக்களில் சிலர் எடப்பாடி ஒழிக, சசிகலாவிற்கு துரோகம் செய்த இபிஎஸ், காலில் விழுந்து பதவி பெற்ற இபிஎஸ் வெளியேறு என கூச்சலிட்டனர். அப்போது எடப்பாடியுடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கும், கோஷமிட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மரியாதை செலுத்தி விட்டு காரில் செல்லும் போது பசும்பொன் தெப்பக்குளம் அருகே எடப்பாடி பழனிச்சாமி கார் மீது காலணி வீசப்பட்டது, அப்போது எடப்பாடி ஒழிக என கூச்சலிட்டனர்.

இதுகுறித்து கமுதி எஸ்.பி தனிப்பிரிவு காவலர் அன்வர் முகமது, காவலர் வேல்முருகன் ஆகியோர் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை செய்து வந்த போலீசார் கமுதி அருகே வடுகப்பட்டியை சேர்ந்த முனியசாமி மகன் முத்துமாரி, கடலாடி அருகே சின்ன பொதி குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ராஜீவ் காந்தி ஆகிய இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்