பயணி தவறவிட்ட ₹1.22 லட்சம் பணம் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்: நேர்மையை பாராட்டி ₹5 ஆயிரம் பரிசு வழங்கிய பயணி

சென்னை: ஆட்டோவில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.1.22 லட்சம் பணத்தை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பாராட்டி பெண் பயணி ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினர். சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(48). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை 5 மணிக்கு வள்ளுவர்கோட்டம் லேக் ஏரியாவில் ஒரு பெண் பயணியை ஆட்டோவில் ஏற்றியவர், தி.நகர் பகுதியில் இறங்கினார். பிறகு ஆட்டோ டிரைவர் மற்றொரு சவாரிக்காக தி.நகரில் காத்திருந்தார்.

அப்போது ஆட்டோவின் பின் இருக்கையை பார்த்த போது, அதில் ஒரு பை இருந்தது. அதை எடுத்து பார்த்த போது, அதில் ரூ.1,22,490 பணம் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தது. பையை வைத்து கொண்டு ஆட்டோவில் இறங்கிய பெண்ணை சுற்றி பார்த்தார். ஆனால் அந்த பெண் அங்கு இல்லை. இதனால் ஆட்டோ டிரைவர் பணம் இருந்த பையை எடுத்து கொண்டு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

அதைத் தொடர்ந்து, வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் பையில் இருந்த அடையாள அட்டையில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவை சேர்ந்த பூர்ணிமா(37) என்பவர் போனை எடுத்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை போலீசார் கூறியதும், ஆமாம் சார் என்னுடைய பேக்தான் தான் அது. நான் எங்கேயோ தொலைத்துவிட்டேன் தேடி வருகிறேன் என்று கூறினார். பிறகு போலீசார் அழைப்பை ஏற்று பூர்ணிமா தனது கணவருடன் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்தர். ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.22 லட்சம் ரொக்க பணம் மற்றும் அடையாள அட்டையை போலீசாரிடம் இருந்து பூர்ணிமா பெற்று கொண்டார். பிறகு பூர்ணிமா ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை பரிசாக வழங்கி கவுரவித்தார்.

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு