பசுபதி பாண்டியன் ஆதரவாளர் எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது

நெல்லை: பசுபதி பாண்டியன் ஆதரவாளரான எஸ்டேட் மணி, மூணாறில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். தேவேந்திர குல வேளாளர் இளைஞர் இயக்கத்தை நடத்தி வந்தவர் பசுபதி பாண்டியன். இவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது ஆதரவாளர் எஸ்டேட் மணி. இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜாமீனில் வெளியில் வந்தவர், மும்பைக்குச் சென்று தங்கிவிட்டார். அங்கு அவர் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் சிறையில் எஸ்டேட் மணி அடைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் வைத்து அவருக்கும் வேறு சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் சிலரை எஸ்டேட் மணி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எஸ்டேட் மணி தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மதுரை சிறை முன்பு சில நாட்களுக்கு முன்னர் நெல்லையைச் சேர்ந்த 2 பேர், எதிர்தரப்பினரை தாக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் எஸ்டேட் மணி சேர்க்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மூணாறு எஸ்டேட் பகுதிக்கு எஸ்டேட் மணி வந்திருப்பதாக ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அதிகாலையில் மூணாறு சென்று எஸ்டேட் மணியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் எஸ்டேட் மணியை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி தமிழர் விடுதலைக் களத்தின் தலைவர் வக்கீல் ராஜ்குமார், நெல்லை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அதேநேரத்ததில், எஸ்டேட் மணியின் மனைவியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது