ஒரு வருஷமா கட்சியில் இருப்பவரை டெல்லிக்கு அழைத்து மீண்டும் கட்சியில் சேர்த்த கூத்தை கூறுகிறார்: wiki யானந்தா

‘‘தா மரைக்கட்சி நிர்வாகிகள்தான் இப்போதும் இலைக்கட்சி மாவட்ட நிர்வாகிகளை இயக்குகிறார்களாமே..’’ என்று ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.‘‘வட மாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட கட்சிகள் வேலைகளை தொடங்கி விட்டன. ஆனால் இலைக்கட்சியில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்னதான் தாமரைக்கட்சி கூட்டணியை விட்டு பிரிந்ததாக கூறினாலும், இந்த மாவட்டத்தில் இலைக்கட்சி மாவட்ட நிர்வாகிகளை, தற்போது வரை தாமரைக்கட்சி நிர்வாகிகள் தான் இயக்குகின்றனர். ‘இந்த தொகுதியில் குக்கர் கட்சிக்காரர் எங்கள் கூட்டணியில் போட்டியிடுவார். பார்த்து நடந்துக்கங்க’ என்ற பாணியில் தாமரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனராம்… இதனால் இலைக்கட்சி சார்பில் யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. மேலும், மாவட்ட நிர்வாகிகள் மேலிடத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பேசாமல் கூட்டணியில் உள்ள ஏதாவது ஒரு கட்சிக்கு சீட் ஒதுக்க கூறுவோம் என கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ‘ஒரு வேளை குக்கர் கட்சிக்காரர் இங்கு போட்டியிட்டு, அவரை விட இலைக்கட்சி குறைந்த ஓட்டு வாங்கினால் சேலத்துக்காரரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் பதவிக்கும் சிக்கலாகிவிடும் என்பதால் நிர்வாகிகளிடம் குழப்பமும், தவிப்பும் எகிறி நிற்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் காட்டுக்குள்ள சண்டையாமே, உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமீபத்தில் நடந்த விழாவில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், மலைமீது வாகனங்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிக்கட்டு வழியாக கால்
நடையாக நடந்து சென்றனர். அந்த சமயத்தில் காட்டு யானை, அப்பகுதியில் ஊடுருவியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறையினர் யானையை வனத்துக்குள் விரட்டுவதற்காக, பட்டாசுகளுடன் வனத்துறை வாகனத்தில் மலைக்கு விரைந்தனர். ஆனா, அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசாரும், இந்து சமய அற
நிலைய துறை அதிகாரிகளும், வனத்துறை வாகனத்துக்கு அனுமதி மறுத்திருக்காங்க. ‘‘பாஸ் இருந்தால் மட்டுமே மலை மீது ஏற அனுமதி அளிப்போம்’’ எனக்கூறி விட்டனர்.
இதைக்கேட்டு, வனத்துறையினர் மிரண்டு போய்விட்டாங்களாம். எங்க கட்டுப்பாட்டுல உள்ள வனத்துக்கு போக எங்களிடமே பாஸ் கேட்கிறீங்களா…? என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்காங்க. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, ஒரு வழியா உள்ளே சென்று, யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த விவகாரம் முடிவுக்கு வந்த சில மணி நேரத்தில், வனப்பகுதிக்கு மேலே இந்து சமய அறநிலைய துறையினர், டிரோன் பறக்கவிட்டு, நிகழ்ச்சி தொடர்பான வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வனத்துறை அனுமதியின்றி டிரோன் பறக்கவிடப்படுவதாக கூறி, அதை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரோன் ஒப்படைக்கப்பட்டது. இவ்விரு துறையினரும் அடிக்கடி எதிரும், புதிருமாக செயல்படுவது பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

‘‘புதுசா வந்தவங்களுக்கு பதவியான்னு கேட்டு கிரிவலம் நிர்வாகிங்க இலைகட்சிக்கு முழுக்கு போடுறாங்களாம் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஓ… தெரியுமே…கிரிவலம் மாவட்டத்துல, கிழக்கு மாவட்டத்து இலை கட்சிக்கு சில நாட்களுக்கு முன்னாடி, புதிய நிர்வாகிகள் அறிவிப்பை சேலத்துக்காரர் வெளியிட்டாரு. அந்த அறிவிப்பை பார்த்து, நீண்டகாலமா கட்சியில இருக்குறவங்க எல்லாம் விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டாங்களாம். மாஜி மந்திரியான மீசைக்காரர், மாவட்ட பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, புகைந்துகொண்டிருந்த கோஷ்டி பூசல் இந்த அறிவிப்பால, வெளிச்சத்துக்கு வந்திருக்காம். தேனிக்காரர் ஆதரவா செயல்பட்டு, திடீரென சேலத்துக்காரர் பக்கம் தாவி மாவட்ட பொறுப்பை வாங்கியவர் மீசைக்காரர். அந்த பாசத்துல, தன்னோடு இருந்தவங்களுக்கு மாவட்ட இணை, துணை பதவிகளை கொடுத்திருக்காறாம்.

ஆரம்ப காலத்தில் இருந்தே சேலத்துக்காரருக்கு விசுவாசமாக இருந்த ஒருத்தருக்கும் பதவி கிடைக்கலையாம். அதுமட்டுமில்ல..! நகராட்சி கவுன்சிலர் எலக் ஷன்ல டெபாசிட் கூட வாங்காத ஒரு பெண்ணுக்கு, மாவட்ட இணை பதவி கொடுத்தது, எல்லோரையும் கொதிப்படைய வச்சிருக்காம். கேப்டன் கட்சிக்கு துரோகம் செய்துட்டு இலைக் கட்சிக்கு தாவி வந்த மாஜி சட்டத்தோட மன்ற உறுப்பினருக்கும், பதவி கிடைச்சிருக்காம். அதனால், நீண்டகால கட்சிக்காரங்க சில பேரு, வர்ற எம்பி தேர்தலுக்கு முன்னால இலை கட்சிக்கு முழுக்கு போடப் போறதா பேச்சு அடிபடுது. ஆனாலும், மாஜி மீசைக்காரரு அதைப்பற்றி கவலைப்படலையாம். தலை கீழா நின்னாலும் இந்த தேர்தலில் நாம ஜெயிக்க போறது இல்லை. கட்சியவிட்டு போறவங்க போகட்டும்னு வெளிப்படையாவே பேசுறாருன்னு ரத்தங்களின் சத்தம் கேட்கத்தொடங்கியிருக்குது’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.

‘‘ஒரு வருஷமாக கட்சியில இருக்கிறவரை டெல்லிக்கு அழைத்துப்போய் மீண்டும் இணைத்த கூத்து பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அழைத்து சென்று தாமரை கட்சியில் சேர்ந்ததாக அடையாள அட்டையும் வழங்கி மவுண்ட் தலைவர் பெருமைப்பட்டுக்கொண்டாராம். ஆனால் இணைப்பில் கலந்துகொண்ட தென்கோடி தொகுதியில் முன்னாள் இலை கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்தவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் லோக்கல் தலைவர் முன்னிலையில் தாமரை கட்சியில் இணைந்தாராம். அதன் பிறகு தென்கோடிக்கு மவுண்ட் தலைவர் வந்தபோது போஸ்டர் அடித்தது, விளம்பரம் செய்தது என்று அந்த முன்னாள் எம்எல்ஏவும் தடபுடல் காட்டினாராம். இப்போது டெல்லியில் மீண்டும் நடந்த இணைப்பை பார்த்து அவர் ஏற்கனவே ஒருவருடமாக தாமரை கட்சியில்தானே இருக்கிறார், அவங்க கட்சியில் இருக்கிறவங்களையே மீண்டும் அவங்க கட்சியில் சேர்த்து ஏன் இணைப்பு என்று சுய தம்பட்டம் அடிக்கிறார்கள் என்று கேட்கின்றனராம் இலை கட்சியினர்’’ என்று முடித்தார் விக்கியானந்தா

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்