கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கேரளா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 1970ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், அந்தத் தொகுதி மக்களால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் உம்மன் சாண்டி. சிறந்த பண்பாளரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பெருந்தலைவர் காமராஜரைப் போல எளிமை, நேர்மை, தூய்மையாக அரசியல் பணி மேற்கொண்டு, கேரள மாநில முதல்வராக இருமுறை பொறுப்பேற்று அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கை மேற்கொண்ட உம்மன் சாண்டி, காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களது பிரச்னைகளை புரிந்து அவைகளை தீர்த்து வைப்பதில் சிறப்பான பணியை செய்தவர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். கேரள சட்டமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றியதற்காகவும், பொது சேவைக்காகவும் ஐக்கிய நாடுகள் சபையால் விருது பெற்ற பெருமைக்குரியவர். தான் சார்ந்த இயக்கத்துக்கும், கேரளா மக்களின் முன்னேற்றத்துக்கும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!