கட்சி தலைமை ஒப்புதல் இல்லாமலேயே அலுவலகம் திறந்து களப்பணியை ஆரம்பித்துள்ள பொன்னாரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

“அடாவடி வசூல் செய்து கெத்து காட்டுறாராமே ஊழியர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவர், கடந்த ஒரு வருட காலமாக வசூலில் உச்சத்தில் இருக்கிறாராம். இவரிடம் வரும் கோப்புகள் ஆரம்ப கட்ட பரிசீலனை முடிக்கப்பட்டு, மண்டல உயரதிகாரியிடம் செல்கிறது. அவரிடம் கையெழுத்து பெற்று, வரி வசூலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு செல்கிறது. அவர்கள், விண்ணப்பத்தை சரிபார்த்து, மேல்நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த பணிகள் முறைப்படி நடந்தாலும், இந்த உதவியாளர் தேவையின்றி பல இடங்களில் குறுக்கீடு செய்கிறாராம். விண்ணப்பதாரர்களிடமிருந்து கரன்சி பெற்று, இவர்தான் மேலதிகாரி வரை பிரித்து கொடுக்கிறாராம். அதேசமயம், வரி வசூலர்கள் பற்றி தவறான தகவல்களை எடுத்துக்கூறி, அவர்களிடமிருந்தும் ஆட்டையைப்போடுகிறாராம். இம்மண்டல அலுவலக ஊழியர்கள் பலரை மிரட்டி, லட்சக்கணக்கில் கரன்சி வசூலிக்கிறாராம். ஊழியர்கள் யாரேனும் கரன்சி கொடுக்க மறுத்தால், அவர்களை, மேலதிகாரியிடம் சிக்கவைத்து, மெமோ வாங்கிக்கொடுத்து விடுகிறாராம். சமீபத்தில்கூட 5 பேருக்கு மெமோ வாங்கி கொடுத்துள்ளார். ஆறு எழுத்து பெயர் கொண்ட இந்த உதவியாளரின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரிக்குதாம். நியாயமான முறையில் செயல்படும் ஊழியர்கள் பலர், மண்டையை பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தென்கோடியில் சீட் யாருக்காம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்கோடி தொகுதியில் தேர்தல் என்றாலே காவி கட்சியில் பொன்னானவர் கை காட்டும் வேட்பாளருக்குதான் சீட் என்ற நிலை இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் என்றால் அவர்தான். முதல் வேட்பாளராக கட்சி முறையாக அறிவிக்கும் முன்பே களப்பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக, காவி கட்சியில் இம்முறை பலரும் தங்களுக்குதான் சீட் என கூறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சீட் கேட்டு கட்சி தலைமையிடம் பொன்னானவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு நாட்கள் முன்பு நாகர்கோவிலில் காவி கட்சி தேர்தல் அலுவலகம் ஊடகத்தினருக்கு எந்த தகவலும் இன்றி கட்சி நிர்வாகிகளை மட்டும் அழைத்து பொன்னானவர் திறந்துள்ளார். கட்சி தலைமை ஒப்புதல் இன்றி தேர்தல் அலுவலகம் திறக்கமுடியுமா? எனவே சீட் பொன்னானவருக்குதான் என அவரது ஆதரவாளர்கள் அடித்து கூறி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாந்திரீக பொருட்களுடன் வலம் வருகிறாராமே மாங்கனி வி.சி…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முறைகேடு புகாரில் சிக்கி கைதான மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி வி.சி, தற்போது ஜாமீனில் வந்து பணிகளை கவனிச்சுட்டு வராரு. தனது தீவிர ஆதரவாளரான ரிஜிஸ்ட்ரார சஸ்பெண்ட் செய்ய சொல்லி கவர்மென்ட் உத்தரவிட்டும், அத கண்டுக்காம இருக்காரு. வெளிப்படையா எதையும் காட்டிக்காத அவரு, எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கணும்னு நினைச்சிருக்காரு. இதுக்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழம, பிரம்ம முகூர்த்த நேரத்துல யுனிவர்சிட்டியில இருக்குற தனது வீட்ல மகா யாகம் ஒண்ண நடத்தியிருக்காரு. இதுக்கு கூடவே இருந்து எல்லா ஏற்பாடும் பண்ணுனது, அவரோட மலையேறும் உறவினரான, இலைக்கட்சியின் மாஜி மினிஸ்டரோட உடன்பிறப்பு தானாம். பார்டர்ல இருக்குற தொழில் நகர சேர்ந்த அவரு, மலையாள தேசத்துல இருந்து பிரத்யேக மாந்திரீகர்கள கூட்டி வந்திருக்காரு. வீட்ல யாகம் நடத்துனது மட்டுமில்லாம, அதுல வச்சு பூஜை பண்ணின தகடு, கயிறு, எலுமிச்சை, கருப்பு மை எல்லாத்தையும், எப்போதும் கார்ல வச்சுகிட்டு வலம் வர்றாராம் வி.சி. அதேசமயம் தனக்கு எதிரா இருந்த எல்லோரையும் ஒரு கை பார்க்காம விடக்கூடாதுனு சபதம் போட்டிருக்குற நிலையில், சில இடங்கள்ல பூஜை தகடு பதுக்கி வைச்சுருக்கிறதா யுனிவர்சிட்டி வாத்தியாருங்க பரபரப்பா பேசிக்குறாங்க…..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியின் சுணக்கத்துக்கு காரணம் என்னவாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் இனிப்பு நகரத்து பல்வேறு கட்சியினரும் குற்றால அருவி அமைந்துள்ள எம்பி தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட பலர் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில், இப்போது இங்கு யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி பலமில்லை என்பதால் பின்வாங்குகின்றனர். தொகுதிக்குள் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட மாநில அரசுத் திட்டங்கள் பலவும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதும், இந்த பின்வாங்கலுக்கு காரணம் என்கின்றனர். இத்துடன் முக்கிய காரணமாக, மெடல் மாவட்டத்து, இனிப்பு நகரில் இலைக்கட்சி ஆட்சி காலத்தில், ஆன்மிக நகரான இங்கு திருவிழாவை சிறப்பாக நடத்த யாரும் முன்வரவில்லையாம். இதுவும் இப்பகுதி மக்களிடம் மிகுந்த வருத்தத்தைத் தந்திருக்கிறது. இதையெல்லாம் நினைத்து தேர்தலில் களம் காண்பதில் இலைக்கட்சியினர் சுணக்கம் காட்டி வருகின்றனர். இலைக்கட்சியின் முக்கிய தலைகள் பேசிப்பார்த்தும் பயனில்லை என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பத்திரத்தோட பதிவு எல்லாம் உரிய ஆய்வு ெசஞ்சி நடக்கலைனு புகார் வருதே..’’
‘‘கிரிவலம் மாவட்டத்துல கலசத்துல தொடங்கி பாக்கம் என்று முடியுற ரிஜிஸ்டர் ஆபிஸ் இயங்கி வருது. இங்க சொத்து பதிவு செய்றதுக்கு முன்னாடி அதிகாரிங்க உரிய முறையில ஆய்வு செய்றதில்லையாம். புரோக்கர்ஸ் சொல்ற தகவலை கேட்டுகிட்டு அதனடிப்படையில பத்திரங்களை பதிவு செய்றாங்களாம். பல பகுதியில அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்றதாகவும், சர்வே நம்பர் முறையாக ஆய்வு செய்யாம பத்திரப்பதிவு செய்றதாகவும் புகார் எழுந்திருக்குது. வேறு ஒருவருடைய சொத்துக்களையும் தவறுதலாக இன்னொருத்தர் பெயர்ல பதிவு செய்றதாகவும் சொல்றாங்க. இதனால பல சட்ட சிக்கல்களை சந்திக்குறதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறாங்க. இதனால உயர் அதிகாரிங்க, பாக்கம்னு முடியுற பதிவு அலுவலகத்துல, பத்திர பதிவுகள் குறித்த விவரங்களை முறையாக ஆய்வு செய்து தவறான பதிவு செய்திருந்தா உடேன உரிய நடவடிக்கை எடுக்கணும்னு அந்த பதிவு அலுவலக லிமிட்ல இருக்குற ஜனங்களோட புகார் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே 13 சவரன் நகை, பணம் கொள்ளை..!!

ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை: காவல் ஆணையர் விளக்கம்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!