கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நர்சுகள், பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறாராமே ஒரு அதிகாரி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஹீரோ பெயரை கொண்ட மருத்துவ அலுவலர் ஒருவர், பெண் ஊழியர்களிடம் மிகவும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாக தொடர்ந்து புகார்கள் வருதாம்.. இவர், ஏற்கனவே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் பணியாற்றி வந்தபோது இதே புகாரின் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இடமாற்றம் செய்யப்பட்டாராம்.. தற்போது மீண்டும் அதே தவறை செய்றாராம்.. வட்டார அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், நர்ஸ்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, வர்ணிப்பதுனு எந்த நேரமும் அதிகாரி ஜாலி மூடில்தான் இருக்கிறாராம்.. எதிர்த்து பேசும் பெண் ஊழியர்கள் அல்லது ஒத்துழைப்பு கொடுக்காத பெண் ஊழியர்களை ஒர்க் பெர்பாமன்ஸ் சரியில்லை எனக்கூறி வேறுவிதமாக டார்ச்சர் கொடுக்கிறாராம்.. அன்றாடம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைதான் ஒர்க் டைம் என்றாலும், ஒத்துழைக்காத பெண் ஊழியர்களை வேண்டுமென்றே இரவு 8 மணி வரை பணி செய்ய வைக்கிறாராம்.. டிஸ்கசன், மீட்டிங்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.. இவரது டார்ச்சர் தாங்க முடியாமலும், விஷயத்தை வெளியே சொல்ல முடியாமலும் பெண் ஊழியர்கள் படாதபாடு படுகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கண்காணிப்பு குழு அமைக்க சேலத்துக்காரர் முடிவு செஞ்சிருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இலை கட்சியில் நடக்கும் பனிப்போர் மற்றும் உண்மை நிலவரம் ஆகியவை குறித்து துல்லியமாக தெரிந்துகொள்ள வேண்டும்னு சேலத்துக்காரர் நினைக்கிறராம்… கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கூட தில்லாலங்கடி வேலையில் ஈடுபடுவது சேலத்துக்காரர் கவனத்துக்கு போயிருக்காம்.. தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் கூறும் கருத்துகளை பொதுவாக அவர் கேட்டு தெரிந்து கொள்கிறாராம்.. ஆனால், அவர்களது பேச்சை முழுவதுமாக நம்புவது இல்லையாம்… இதனால் டெல்டாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டறிய தனியாக குழு ஒன்று அமைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இதன் மூலம் முக்கிய நிர்வாகிகளுக்கு செக் வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை தக்க வைப்பது எப்படி என யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்களாமே மலர்க்கட்சி நிர்வாகிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலர் கட்சியில உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தணும்னு எல்லா மாவட்ட நிர்வாகிகளிடமும் மலையானவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பே அறிவுறுத்தினாராம்.. ஆனா அதை யாரும் பொருட்படுத்தவே இல்லையாம்.. குறிப்பா, வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்து, தீப மாவட்டங்கள்ல அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில பெரிதா ஆர்வம் காட்டாம நமக்கென்ன வந்தது என்ற போக்கில்தான் உள்ளார்களாம்.. ஆனாலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியே ஆகணும்னு, இல்லைன்னா நடவடிக்கை எடுக்கப்படும்னு மேலிடத்தில இருந்து கறாரா எச்சரிச்ச பிறகு வேறு வழியில்லாம சில இடங்கள்ல இறங்கி வீடுகள்ல போய் உறுப்பினரா சேர்க்க முயற்சித்தாலும் யாரும் கண்டுக்கவே இல்லையாம்.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கொடுத்திருக்கிற உறுப்பினர் சேர்க்கை இலக்கை அடைய வாய்ப்பே இல்லைன்னு மாநில நிர்வாகிங்ககிட்ட கைவிரிச்சுட்டாங்களாம்.. இதனால, இருக்கிற பதவிகள தக்க வைப்பது எப்படின்னு யோசிச்சிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொறுப்பாளரை மொய்க்கும் இலைக்கட்சி நிர்வாகிகளால் சிட்டி செயலாளர் கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி சிட்டியில இலைக்கட்சிக்கு ரெண்டு பகுதி செயலாளர்கள் பதவி ரொம்ப நாளா காலியா கிடந்துச்சாம்.. இது அந்த கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்குள்ள பகுதியாம்.. அதனால அந்த பதவிய பிடிக்க கட்சிக்குள் ஏகப்பட்ட போட்டியாம்.. மக்கள் பிரதிநிதியே முட்டி மோதுனாராம்.. ஆனா சிட்டி செயலாளரு அந்த பதவிக்கு ரெண்டு பேர் பெயர சிபாரிசு செஞ்சிருக்காரு.. ஆனா அவரை இலைக்கட்சி தலைவர் கண்டுக்கலியாம்.. சமீபத்துல நடந்த எம்பி எலக்‌ஷன்ல இலைக்கட்சி பொறுப்பாளரா செயல்பட்ட நிர்வாகி சிபாரிசு செய்தவர்களுக்கே பகுதி செயலாளரா விஐபி அறிவிச்சிட்டாராம்.. இதனால சிட்டி செயலாளரே அதிர்ச்சியடைஞ்சிட்டாராம்.. ஒவ்வொரு தடவையும் வரும்போது எந்த குறையும் வைக்காம நாம வீட்டுக்கு போயி வரவேற்பு கொடுத்தோமே… நம்ம மேல ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சிட்டாரா அல்லது யாராச்சும் என்னத்தையாவது சொல்லி போட்டுக்கொடுத்துட்டாங்களான்னு கவலையா இருக்காராம்.. இப்போ சிட்டியில செயலாளரை விட எம்பி எலக்‌ஷன்ல பொறுப்பாரளரா செயல்பட்டவரு கை ஓங்கி இருக்கிறதா கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க.. இதனால சிட்டி நிர்வாகிகள் எல்லோரும் பொறுப்பாளரை மொய்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.. இதனால சிட்டி செயலாளர் கலக்கத்தில் இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மந்திரியால் முக்கிய நிர்வாகிகள் மனம் வருந்தக் காரணம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவருக்கு, ஹனிபீ மாவட்டத்தை கூடுதலாக கவனிக்கும் பொறுப்பை தலைமை வழங்கியிருக்கிறது. இதனால் அடிக்கடி ஹனீபீ மாவட்டத்திற்கு சென்று வருகிறாராம். அங்கு ஏற்கனவே மாவட்ட முக்கிய பொறுப்பில் மாஜி எம்எல்ஏ உட்பட 2 பேர் இருக்கின்றனர். ஆனாலும், பொறுப்பு வழங்கப்பட்டதால் தூங்கா நகர மாஜி, அங்கு நடக்கும் பொதுக்கூட்டம் உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சிகளில் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்கிறாராம். இதனால் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இருவரும், கடும் மன வருத்தத்தில் இருக்கின்றனர். அதிலும், இலைக்கட்சியின் முன்னாள் தலைவர், முன்னாள் பொதுச்செயலாளரிடம் நம்பிக்கையானவராக திகழ்ந்த தன்னை, இப்படி பொறுப்பை கொடுத்து, டம்மியாக்கி விட்டனரே என மாஜி எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்… இதை தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் பவர்புல் ஆக யாரும் இல்லை… அதனால்தான் தூங்கா நகர மாஜி அமைச்சரை அனுப்பியிருக்கிறோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க’ என தகவல் வந்ததாம். இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பதுபோல, பொறுப்பை வழங்காமலே இருந்திருக்கலாமே என இருவரும் தனித்தனியாக புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது