கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பவானி சுப்பராயன் நேற்று காலை 8.45 மணிக்கு விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, குடியிருப்புகள் அமைந்த பகுதி. அந்த இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய விதிகளில் அனுமதி தரப்படவில்லை.

அதனால் அவரது வீட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் 2000 சதுர அடி இடத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார். அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி வழக்கறிஞர்கள் சங்கர சுப்பு, கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, ஆம்ஸ்ட்ராங் இருந்த அலுவலகத்தில் 2400 சதுர அடி இடம் உள்ளது. அங்கே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரினர். இதையடுத்து நீதிபதி, குடியிருப்புகள் உள்ள, அடர்த்தியான வீடுகள் இருக்கும் பகுதியில் எப்படி அடக்கம் செய்ய முடியும்.

சரியான இடத்தை தேர்வு செய்யுகள், பெரிய ஏரியாவாக, குடியிருப்புகள் இல்லாத மக்கள் எளிதாக சென்று வர கூடிய ஏரியாவாக பாருங்கள் நீதிமன்றம் அதனை பரிசீலனை செய்யும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார். தொடர்ந்து இந்த வழக்கு 12 மணிக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெரம்பூர் ரேவதி ஸ்டோர் அருகே 7,400 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் சங்கர்சுப்பு கோரிக்கை விடுத்தார்.

அதுதொடர்பான ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, ‘‘இதுகுடியிருப்பு பகுதி. இங்கு புதைக்க அனுமதிக்க முடியாது’’ என்றார். ஆனால், மனுதாரர் தரப்பில் விஜயகாந்துக்கு அளித்த அதே சலுகை ஆம்ஸ்ட்ராங்கிற்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதி, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அவர் உடல் அடக்கம் செய்த இடம் பெரியது, விசாலமானது. அதுமட்டுல்ல. தமிழ்நாடு அரசு அந்த கோரிக்கையை பரிசீலித்து, உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தது.

ஆனால் இதில் மாநகராட்சிக்கு அளித்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள், கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டனர். அதனால், அரசு மூலகொத்தளத்தில் வழங்கியுள்ள இடத்தில் உடலை அடக்கம் செய்துவிட்டு, வேறு நல்ல இடத்தை விலைக்கு வாங்கிய பின்னர், சடலத்தை மீண்டும் அதில் மறு அடக்கம் செய்யுங்கள். கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபம் எவ்வளவு அழகாக உள்ளது. அதுபோல இவருக்கு அழகான மணி மண்டபம் கட்டவேண்டாமா? குறுகிய இடத்தில் மணி மண்டபம் கட்டினால் அழகாகவா இருக்கும்? அதனால், இன்று உடலை அடக்கம் செய்யுங்கள்.

இதுகுறித்து மனுதாரர் தரப்பில் விளக்கத்தைக் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார். பின்னர் 2.15 மணிக்கு மேல் வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான அனுமதி அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

இதை பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் கட்சி அலுவலகத்தில் அவர் நினைவாக நினைவிடம் கட்டுவது அல்லது மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசின் அனுமதிகளை பெற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தனக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, அந்த விண்ணப்பத்தின் மீது அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உடலின் இறுதி ஊர்வலத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

* ஆவடி அருகே பொத்தூரில் பவுத்த முறைப்படி உடல் அடக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல், நீதிமன்ற உத்தரவின்படி, ஆவடியை அடுத்து பொத்தூர் ரோஜா நகரில் உள்ள உறவினர் லதா வெங்கடேசனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து மாலை 5 மணி அளவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் புறப்பட்டது.

மாதவரம் ரவுண்டானா, புழல், ரெட்ஹில்ஸ், பம்மதுகுளம் கூட்ரோடு, கோனிமேடு வழியாக பொத்தூர் ரோஜா நகருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் நள்ளிரவு வந்தடைந்தது. இறுதிச்சடங்குகளை செய்ய கர்நாடகா மாநிலத்திலிருந்து 7 புத்த பிட்சுகள் வரவழைக்கப்பட்டு பவுத்த முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு ஐந்து வாசனை திரவியங்களால் அவரது உடலை தூய்மைப்படுத்தி வெள்ளாடை உடுத்தி, ‘சமத்துவ தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங், மாநிலத் தலைவர், பகுஜன் சமாஜ் பார்ட்டி, ஜெய் பீம்’ என்று பொறிக்கப்பட்டு சந்தன பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் கோபிநாத், புரட்சி பாரத தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமுல்ராஜ் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் போது காப்பாற்ற சென்று வெட்டுப்பட்ட அவரது அண்ணன் எர்குலஸ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்