கட்சி கரைந்து போவதை தடுக்க மறுபடியும் இலை தலைவரை சந்தித்து பேச திட்டமிட்டிருக்கும் மாஜிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தை காட்டுவதற்காக வீடு வீடாக ‘விட்டமின் ப’ கொடுத்தும் இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் இலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காங்க.. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும்னு தலைமை மேலிடத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகளுக்கு முதல் நாளே உத்தரவு போட்டு இருந்ததாம்… இதனால் கட்சி நிர்வாகிகள், ‘விட்டமின் ப’ கொடுத்து கூட்டத்தை அதிகளவில் காட்டுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்காங்க.. இதற்காக நிர்வாகிகள் மாநகர் முழுவதும் வீடு தேடி கட்சியினரை நேரில் சந்தித்து ‘விட்டமின் ப’ அள்ளி அள்ளி கொடுத்தாங்களாம்.. ‘விட்டமின் ப’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டதால் பெரிய அளவில் கூட்டம் வந்து விடும்னு அனைவரும் கனவில் மிதந்திருக்காங்க.. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லையாம்.. இதனால் நிர்வாகிகள் கடும் அப்செட்டுக்குள்ளாயிட்டாங்களாம்.. தலைமைக்கு கூட்டத்தை அதிக அளவில் காட்டி ஐஸ் வைக்கலாம்னு நினைத்தது எல்லாம் தவிடு பொடியாகி விட்டதே என்று நிர்வாகிகளுக்குள் புலம்பியபடிச் சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவி உயர்வு கிடைச்சதும் துடிப்பு, நேர்மை என்றால் என்னனு கேட்கும் அளவுக்கு கரன்சி குவிச்சிக்கிட்டு இருக்கிறாராமே காவல் அதிகாரி ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் ஒருத்தர் இந்துக்களின் புனித ஸ்தலம் என போற்றப்படுகிற ஊரின் பெயரை முதல் பாதியாக கொண்டவர். இவர், கோவை மாநகரில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்தபோது துடிப்புடன், நேர்மையாக செயல்பட்டிருக்காரு.. ஆனால், ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதும், இவரது போக்கு மாறிவிட்டதாம்.. அதாவது, வருவாய் குவிப்பதில் முழு கவனம் செலுத்த துவங்கிவிட்டாராம்.. தற்போது பணிபுரியும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டாஸ்மாக் பார் மற்றும் ‘எலைட் பார்’களை குறி வைத்து, கரன்சி குவித்து வருகிறாராம்.. இந்த ‘பார்’ டெண்டர் எடுத்தவர்களிடம், சட்ட விரோதமாக கூடுதல் நேரம் ‘பார்’களை இயக்க சொல்லிவிட்டு, அதற்கு கைமாறாக கரன்சி பெற்று விடுகிறாராம்.. எங்கே, எப்படி பணம் வருகிறது என யாருக்கும் தெரியாது. ஆனால், வர வேண்டிய இடத்தில் இருந்து கரெக்டா வந்துட்டே இருக்கு என்கிறார்கள். இவர், இதற்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, லாட்டரி வியாபாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையை ஊக்குவித்து வந்தவராம்… இதற்கு கைமாறாக ஒரு பெரிய லாட்டரி வியாபாரியிடம் 40 லகரத்தை ஒட்டுமொத்தமாக ஆட்டைய போட்டு விட்டாராம்.. இவர், எங்கு சென்றாலும் அந்தந்த பகுதியில் உள்ள சட்ட விரோத செயல்களை கரன்சி மழையாக மாற்றி விடுகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜனங்க பிரச்னை தீர்க்க தேர்ந்தெடுத்தா ரெண்டு அணியாக பிரிந்து கமிஷன் பிரச்னையை காக்கிகள் நிலையம் வரை கொண்டு போயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல வா என்று தொடங்கி பேட்டையில முடியுற யூனியன்ல குப்பம் என்று முடியுற ஊர் ஆட்சி இருக்குது.. இங்க இலை கட்சிய சேர்ந்தவரு பிரசிடெண்டா இருக்காரு.. இவரும் துணை பிரசிடெண்டா இருக்குற பழம் கட்சிய சேர்ந்தவரும் ஒரு அணியாக இருக்கறாங்களாம்.. இன்னொரு அணியாக 5 கவுன்சிலர்கள் இருக்காங்களாம்.. இந்த ரெண்டு அணிக்கும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி கமிஷன் பிரச்னை வந்ததாக சொல்றாங்க. அதோட, அந்த ஊர் ஆட்சியில பிளாட் போட்டு சேல்ஸ் செய்றதுக்கு அப்ரூவல் வாங்குறதுலயும் 2 அணிக்கும் பிரச்னையாம்.. இதனால அந்த கவுன்சிலர் அணியை சேர்ந்த கணவன்கள், ஊர் ஆட்சி ஆபிசுக்கு பூட்டு போட்டு பூட்டிட்டாங்களாம்.. அப்புறம் இன்னொரு அணி பிரசிடெண்ட் அந்த பூட்டை உடைச்சிட்டு இன்னொரு பூட்டு போட்டாராம்.. இந்த கமிஷன் தகராறு காக்கிகள் நிலையம் வரைக்கும் புகாராக போயிருக்குது.. கமிஷன் பிரச்னையால காக்கிகள் நிலைய கதவு தட்டப்பட்ட சம்பவம் தெரிஞ்ச ஜனங்க திட்டி தீர்க்குறாங்களாம்.. இனியாவது ஜனங்க பிரச்னைய தீர்க்க போராடணும்னு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மம்மியை மிஞ்சும் அளவுக்கு வேகம் காட்டும் இலைக்கட்சி தலைவரை இயக்குவது யாருன்னு தெரியாம ரெண்டாங்கட்ட தலைவர்கள் எல்லாம் தவிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் வேகத்தை கண்டு ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே ஷாக்காத்தான் இருக்காங்களாம்.. அவரை யார் இவ்வளவு வேகமாக இயக்குகிறார்கள் என்றே தெரியாமல் ரெண்டாங்கட்ட தலைவர்கள் தவிக்கிறாங்களாம்.. மாங்கனி நகரில் முகாமிட்டுள்ள அவர், ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவபடத்தை வைச்சி மரியாதை செலுத்தியிருக்காரு.. அதுவும் மறைந்த மம்மியை போல தனியாக நின்று இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டியிருக்காரு.. மாங்கனி மாநகரில் பத்து எம்எல்ஏக்கள், ஒரு மேல்சபை எம்பி என ஒரு பட்டாளத்தையே வச்சிருந்தும் யாருக்கும் தெரியாமல் இந்த நிகழ்வை நடத்தியிருக்காரு.. மம்மி காலத்துல நம்முடன் நல்லா பழகியவர்தானே என்றிருந்த நிர்வாகிகள் எல்லாம் பத்து அடி தள்ளியே நிக்கிறாங்களாம்.. மாங்கனி நகரில் பேர் சொல்லும் அளவில் கட்சி நிர்வாகிகள் யாருமே இல்லையாம்.. இருப்பவர்களையும் இவ்வாறு புறக்கணிப்பதன் மூலம் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது, அவர்களின் பெயரே வெளியே தெரியக்கூடாது என்பதுதான் அவரோட எண்ணமா இருக்குன்னு இலைக்கட்சி நிர்வாகிகளிடையே இப்போ பேச்சு எழுந்திருக்கு.. உடைஞ்சிக்கிடக்கும் கட்சியை ஒட்ட வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.. ஒண்டிவீரன் ஆங்கிலேயனை தனியாக நின்று அழித்தான். ஆனால் இலைக்கட்சி தலைவரோ கட்சியை அழித்துவிடும் நிலை ஏற்பட்டுப்போச்சு.. ஏற்கனவே 6 மாஜிக்கள் இலைக்கட்சி தலைவரை சந்திச்சி பேசுனாங்க.. தற்போது மேலும் பெரும் கூட்டத்தை கூட்டிக்கிட்டு போய் சந்திக்கலாமுன்னு திட்டம் வச்சிருப்பதாக இலைக்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி