வேற கட்சிக்கு தாவும் சதவீதம் இலை கட்சியில் அதிகரித்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வேறு கட்சிகளுக்கு இடம் மாறிச்செல்கிறார்களாமே இலை கட்சி இளசுகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு சிறிய கட்சிகள் கூட பரபரப்பாக செயல்படுகின்றன. ஆனா, நமது கட்சியில் அதுமாதிரி ஒண்ணும் பரபரப்பே இல்லையே என்ற முனகல் சத்தம்தான் வெயிலூர் மாவட்ட இலை கட்சியில் அதிகரித்து வருகிறதாம். இதுபற்றி கீழ் மட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைமை நிர்வாகிகளிடமும், மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாஜி மந்திரியிடமும் தெரிவிச்சாங்களாம், அவர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.

முக்கிய நிர்வாகிங்க இப்படி இருக்குற நிலையில, இலை கட்சியில, உள்ள இளைஞருங்க பலரும் வேறு கட்சிகளுக்கு இடம் மாறி செல்வது அதிகரித்திருக்குதாம். இந்தநிலையில, நம்ம தலைவர் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று சொன்னா, என்ன அர்த்தம் என்று நிர்வாகிகள் தங்களுக்குள் முணுமுணுக்கத்தொடங்கியிருக்காங்க. வர்ற சட்டமன்ற எலக்‌ஷன்ல தலைமை யாரையாவது வேட்பாளராக அறிவிக்கட்டும், இப்ப எலக்‌ஷன் ஆட்டத்துக்கு யாரும் தயாராக இல்லை என்பதைத்தான் முக்கிய நிர்வாகிங்க நமட்டு சிரிப்புல சொல்றாங்களோன்னு இலை கட்சியிலயே பேசிக்கிறாங்க.

அதுமட்டுமில்லாம வர்ற எலக்‌ஷன்ல இலை கட்சி, 4 அல்லது 5வது இடத்துக்கு போய்டும்போல இருக்குதேன்னு வருத்தமும் படுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சூதாட்டகாரர்களிடம் பறிமுதல் செய்த ரூ.3 லட்சத்துக்கு ரூ.50 ஆயிரம் கணக்கு காட்டிய தனிப்படை காக்கி அதிகாரிகள் பற்றி சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை விரைந்து பிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையில் உள்ள சாமி பெயர் கொண்ட இரண்டு காக்கி அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நகர் பகுதியில் சூதாட்டமாடிய 5 பேரை கையும்களவுமாக பிடித்தார்களாம். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த ரூ.2.50 லட்சத்தை பறித்துள்ளனர். இதில் ஒருவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டையும் பிடுங்கியதோடு, அவரிடமிருந்து பின்நம்பரை மிரட்டி கேட்டு ரூ.50 ஆயிரத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துள்ளார்களாம். இதில் சூதாட்டமாடியவர்களிடம் இருந்து ரூ.3லட்சத்தை பறித்துக்கொண்டு ரூ.50 ஆயிரம் மட்டும் ஸ்டேசனில் கணக்கு காட்டி 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதி ரூ.2.50 லட்சத்தை இரண்டு காக்கி அதிகாரிகளும் ஆட்டைய போட்டுள்ளனர். இந்த தகவல் காக்கிகள் வாட்ஸ்அப் குரூப்பில் அவர்களுக்குள் மாற்றி மாற்றி பதிவு செய்யப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் கவனத்துக்கும் சென்றதால் சம்பந்தப்பட்ட காக்கிகள் கிலியில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளால் எந்த பணிகளும் நடக்காம இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல 4 மண்டல அலுவலகம் இருக்கு. இங்கு டெங்கு ஒழிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுகிட்டு இருக்காங்க. இதுக்கு தேவையான மருந்துகள், பவுடர் எல்லாம் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாம். ஆனா இதற்கான பில் தொகைக்கு கூட, புதுசா வந்த அதிகாரிகள் கையெழுத்து போடாம இழுத்தடிச்சுகிட்டு இருக்காங்களாம். இது போல சுகாதாரத்துறை, பொறியியல் பிரிவுல செய்த பணிக்கான பைல்களும், அதிகாரிகள் டேபிள்களில் தேங்கி கிடக்குதாம்.

எந்த பைல்களிலும் அதிகாரிகள் கையெழுத்து போடாம காலத்தையும், நேரத்தையும் நீட்டிச்சுக்கிட்டே இருக்காங்களாம். நல்ல முறையில் மக்கள் பிரதிநிதிகள் ஆற்றி வரும் பணிகளுக்கு, இந்த இழுத்தடிப்பு ஒரு தடைக்கல்லாக மாறி நிக்குதாம். மெத்தன பூனைகளுக்கு எப்படி மணி கட்டுவது என்பது தான், இப்போது மக்கள் பிரதிநிதிகளின் மைண்ட்செட் ஓட்டமாக உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்காநகர் விவகாரம் என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்காநகர் மாவட்டத்தில் உள்ள முதல்படை வீடு கோயிலில் நடந்த திருமண விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். கோயிலில் பொதுவாக ஆண்டுதோறும் திருவிழா காலங்கள் உட்பட அனைத்து முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். இந்த ஆண்டு எப்போதுமில்லாமல் சஷ்டி நாட்களில் கோயிலில் திருமணம் நடத்த தடை என ஒரு வாய்மொழி உத்தரவை இங்கிருந்து மாறுதலாகி போன அதிகாரி பிறப்பித்துள்ளார்.

இதற்கு கோயிலில் பணியில் உள்ள சில சிவாச்சாரியார்கள் ஆதரவு காட்டவும், அதை உத்தரவாக்கி விட்டு விட்டு அந்த அதிகாரி மாறுதலில் சென்று விட்டாராம். இந்த கோயிலுக்கு வரும் புதிய அதிகாரி இங்குள்ள சில சிவாச்சாரியார்களின் தயவால் மாறுதலாகி தூங்காநகர் வருகிறாராம். திருமணம் நடத்த தடை என பழையவர் கூறி சென்றதால் தற்போது கோயில் அலுவலர்கள் என்ன செய்வது என தெரியாமால் ஒரு பக்கம் புலம்ப, மணவீட்டாரோ திருமணம் நடத்த அனுமதி கிடைக்குமா இல்லையா என தவிக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்