கட்சி பதவி ஏலம், தற்கொலை முயற்சி, மீண்டும் பதவி ராமநாதபுரம் பாஜவினர் சேர்களால் அடித்து மோதல்: ‘சேட்டை பாலா’வால் கார்களில் தப்பிய மாநில நிர்வாகிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜவில் கோஷ்டிபூசல் உச்சத்தில் இருக்கும் நிலையில் நேற்று நடந்த நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், சேர்களால் அடித்து கொண்டு பாஜவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த மாநில நிர்வாகிகள் பதறியடித்து கார்களில் ஏறி ஓட்டம் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்ட பாஜவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க பணம் பேரம் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ வெளியான அவமானம் தாங்காமல் பேரம் பேசிய பாஜ இளைஞரணி நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.

இதையடுத்து மாவட்டத் தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு கலைத்து மாநில தலைமை உத்தரவிட்டது. மாவட்டப் பொருளாளராக இருந்த தரணி ஆர்.முருகேசன் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்டப் பார்வையாளராக முன்னாள் மாவட்டத் தலைவரான முரளீதரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்.கணபதி, மதுரை மண்டல பொறுப்பாளர் சுப.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் பேசும்போது, முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவனின் பெயரை குறிப்பிடவில்லை. இதனை வெளியில் இருந்து கேட்ட கதிரவனின் ஆதரவாளரான பாலா (எ) சேட்டை பாலா உள்ளே நுழைந்து, கதிரவனின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என கூறி தகராறில் ஈடுபட்டார். பாஜவினர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதையடுத்து அவசர, அவசரமாக கூட்டத்தை முடித்த நிர்வாகிகள், மண்டபத்தை விட்டு புறப்பட தயாராகினர். அப்போது அங்கு வந்த சேட்டை பாலா தரப்பினர், மாநில நிர்வாகிகளை பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர் பாலா மீது, மண்டபத்தில் இருந்த சேர்களை தூக்கி வீசினர். பதிலுக்கு சேட்டை பாலா தரப்பும் சேர்களை தூக்கி வீசினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மண்டபமே போர்க்களமாக மாறியது. இதனை எதிர்பார்க்காத மாநில நிர்வாகிகள் உடனே வெளியேறி வேக வேகமாக காரில் ஏறி சென்றனர். அப்போது பின் தொடர்ந்து சென்ற சேட்டை பாலா அசிங்கமாக பேசினார். இதனால் போலீசார் சேட்டை பாலாவை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாநில நிர்வாகிகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோஷ்டிப்பூசல் பூதாகரமாக வெடித்தது பாஜ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயத்தால் பல்டி
செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், ‘‘முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன் காலத்தில் ராமநாதபுரத்தில் கட்சி நன்றாக வளர்ச்சியடைந்தது’’ என்றார். முன்னதாக மேடையில் பேசும்போது, ‘‘கட்சி விரோத செயலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவர்’’ என கதிரவனை விமர்சித்து பேசிவிட்டு, ஒருவர் சத்தம் போட்டதும் அப்படியே அந்தர் பல்டி அடித்துவிட்டதாக கட்சியினர் முணுமுணுத்தனர்.

  • ராமநாதபுரத்தில் மோடி போட்டி?
    கூட்டத்தில் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசும்போது, ‘‘பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மாநில தலைமை சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த தொகுதியில் பாஜ அதிக வாக்குகளை பெற்றுள்ளது’’ என்றார்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை