கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விஜிலென்ஸ் ரெய்டு நான் சொல்லித்தான் நடந்துச்சுன்னு சொல்லியே ஒரு ரைட்டரு காரியத்தை சாதிக்குறாராமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பாடி என்று முடியுற ஏரியாவுல பத்திரத்தை பதிவு செய்ற அலுவலகத்துல போலி ஆவணங்கள பயன்படுத்தி பதிவு நடக்குறதாகவும், அதுக்கு ஒரு ரைட்டர் தான் காரணம்னு புகாரு.. அந்த ரைட்டரு போலி டாக்குமென்ட் பயன்படுத்தி பதிவு செய்ய ட்ரை செஞ்சது தெரியவந்திருக்குது.. இதனால, அந்த ரைட்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க.. அதோட பதிவுத்துறை அதிகாரிங்க, விசாரணைக்கு வரசொல்லி, ரைட்டருக்கு அழைப்பு அனுப்பினாங்களாம்..

ஆனா, விசாரணைக்கு வர சொன்ன நாளுக்கு முன்னாடி நாள்ல, விஜிலென்ஸ் அந்த பதிவு ஆபிஸ்ல ரெய்டுக்கு போயிருக்காங்க.. அங்க 60 கே வரைக்கும் சிக்குச்சாம்.. இப்ப, அந்த ரைட்டரு, நான் சொல்லித்தான் ரெய்டு வந்தாங்க, நான் கொடுக்குற பத்திரங்களை உடனே முடிச்சு கொடுக்கணும்னு அதிகாரிங்களை மிரட்டி காரியத்தை சாதிக்குறாராம்.. இந்த மேட்டர் தான் பாடி பதிவு ஆபிஸ்ல பரபரப்பா பேசப்படுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் நீடித்து வரும் பனிப்போர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மூலம் வெட்டவெளிச்சத்துக்கு வந்திருக்காமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் நகராட்சி கூட்டம் நடந்திருக்கு… கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த இலை கட்சியை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் ஒற்றுமை இல்லாமல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல் நடந்து கொண்டார்களாம்.. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்ய வேண்டும்னு அவர்களுக்குள் பேசி முடிவு செய்திருக்காங்க.. ஆனால் அவர்கள் முடிவெடுத்தப்படி யாரும் வெளிநடப்பு செய்யாமல் கூட்டம் தொடங்கியதும் அவர்களுக்குள் போட்டிப்போட்டு கொண்டு பேச தொடங்கிவிட்டாங்களாம்.. இதனால் அவர்களால் வெளிநடப்பு செய்ய முடிய வில்லையாம்.. கூட்டம் முடிந்து வெளியே வந்த பின்னர்தான் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது வெளிப்படையாகவே தெரியவந்திருக்கு.. ஆக, கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் நீடித்து வரும் பனிப்போர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததாக மூத்த நிர்வாகிகளுக்குள் பேசிக்கிட்டங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கண்டுக்காம விட்டதால் அதிருப்தியில் இருக்காராமே இலை பிரமுகர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கன்னியாகுமரி மாவட்டசெயலாளர் பொறுப்பு வகித்த முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சிலானவர் அதிமுகவில் சில காலம் ஒதுங்கி இருந்தாலும், தனது மகளை மேயர் அல்லது எம்.எல்.ஏ ஆக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு, கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு அதிமுகவில் போட்டியிட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். தற்ேபாது நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வேட்பாளருக்காக தனது மகளுடன், வீதிவீதியாக களம் இறங்கி கலைநிகழ்ச்சி, இதர செலவுகள் என 30க்கும் மேற்பட்ட லகரங்களை செலவு செய்தாராம். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் இணக்கமாக இருந்தார். இந்நிலையில், சிறுமி பாலியல் வழக்கில், நாஞ்சிலார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த செய்தி தனது கட்சி செய்தி தாள் மற்றும் டிவியில் பெரிதாக வரும் என எதிர்பார்த்தார். ஆனால் அதுபற்றி எந்த செய்தியும் இல்லை. இதனால் வெறுப்புற்ற அவர் அதிருப்தியில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சிலரிடம் ஐக்கியமாகி விட்டதாக கட்சி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மக்களவைத் தேர்தல் தோல்வியால் அல்வா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இலை கட்சியினர் துவண்டு போயிருக்கிறார்களாமே..’’
‘‘ஆமா..தமிழ்நாட்டில் 40 இடங்களையும் திமுகவும், கூட்டணி கட்சிகளும் அள்ளி விட்ட நிலையில், இலை கட்சி பல இடங்களில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சோகத்தில் இருந்து அல்வா உள்ளிட்ட தென் மாவட்ட இலை கட்சியினர் இன்னும் மீளவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தாக வேண்டும். ஆனால் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சித் தலைமையிடம் இருந்து, கட்சியை பலப்படுத்த எந்த ரெஸ்பான்சும் இல்லையே என்பது தான் இலை கட்சியினரின் ஏக்கம். ஏற்கெனவே சேலம்காரர், தேனிக்காரர், குக்கர்காரர், சின்னமம்மி என ஆளுக்கொரு திசையாய் கட்சித் தொண்டர்கள் உள்ளனர். இதனால் எதிரணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மற்ற அணியினர் ஓட்டுக்களை மாற்றி போட்டு அதிர்ச்சி வைத்தியம் ெகாடுத்தனராம். இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கட்சி காணாமல் போய் விடுமே….உப்புக் கரைசல் போல கரைந்து விடுமே…..தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம்….என்பது தான் தென் மாவட்ட இலை கட்சியினரின் கவலையாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!