நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து 20 நாட்களாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 20 நாட்களாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக கடந்த 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் 26 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.

திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடனும், மாலை கடலூர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளரும், தொகுதி பொறுப்பாளர்களுமான செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரிடம் தேர்தல் தோல்வி குறித்தும் மற்றும் தற்போதைய தொகுதி நிலவரம் குறித்தும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து, தொகுதியை சேர்ந்த முன்னாள் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஊராட்சிக்குழு தலைவர்கள் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நாளை மறுதினம் (திங்கள்) திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ஆகஸ்ட் 5ம் தேதியுடன் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் முடிகிறது. கடந்த சில நாட்களாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் வெற்றிபெற ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

Related posts

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்

10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்

இன்போஸிசுடன் இணைந்து டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கிறது எல்ஐசி