Tuesday, July 2, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த ஒன்றிணைந்து போராட முடிவு: பாட்னாவில் நடந்த 17 எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்; ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ், கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த ஒன்றிணைந்து போராட முடிவு: பாட்னாவில் நடந்த 17 எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்; ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ், கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

by Karthik Yash
Published: Last Updated on

பாட்னா: பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த 17 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்துள்ளதாக முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எதிர்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் முக்கிய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பை ஏற்று 17 கட்சிகளை சேர்ந்த 32 தலைவர்கள் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முக.ஸ்டாலின், முதல்வர்கள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), பகவந்த் மான் (பஞ்சாப்) பங்கேற்றனர். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாடு கட்சித் துணைதலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் நிதிஷ்குமார், இது ஒரு நல்ல சந்திப்பாகும். பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜவிற்கு எதிராக 17 கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், ஒற்றுமையாக போராட முடிவு செய்துள்ளோம். தேசிய நலனுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகிறது.ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக திட்டங்களை உருவாக்க வேண்டும். தேர்தலை எதிர்கொள்வது, எப்படி செயல்படுவது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: எங்களுக்குள் சில வேறுபாடுகள் இருக்கின்றது. எனினும் அனைவரும் நெகிழ்வுடன் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: வரலாறு மாற்றப்படவேண்டும் என்று பாஜ விரும்புகிறது. ஆனால் வரலாறு காப்பாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். பாட்னாவில் இருந்து எதை தொடங்கினாலும் அது பொது இயக்கமாக மாறும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவோம்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்: ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தை போலவே எங்களது ஐக்கிய முன்னணிக்கும் மக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: நாட்டை காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது பாட்னா கூட்டத்தின் மூலமாக தெளிவாகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன்: இன்றைய தொடக்கம் நாட்டிற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். அனைத்து தலைவர்களும் நேர்மறையான சிந்தனையுடன் ஒன்றிணைந்து செல்வோம்.

லாலு பிரசாத் யாதவ் : பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சந்தன கட்டைகளை விநியோகம் செய்து கொண்டு இருக்கிறார்.

தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 17 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. இது ஆட்சிக்காக அல்ல. கொள்கைகளுக்காக.

மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி: பாஜ மாற்றுவதற்கு விரும்பும் நமது மதசார்பற்ற ஜனநாயக நாட்டின் தன்மையை பாதுகாப்பதே முக்கிய பிரச்னையாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி ராஜா: பாஜவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியானது நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்பட்ட பேரழிவு மற்றும் தீங்கு.

ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி: மகாத்மா காந்தியின் நாட்டை கோட்சேவின் நாடாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது.

* சிம்லாவில் 2வது கூட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும்” என்றார்.

* பீகாரில் காங். டிஎன்ஏ
பீகார் வந்த ராகுல்காந்தியை முதல்வர் நிதிஷ் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். பாட்னாவில் சதாகத் ஆசிரமத்தில் கட்சி தொண்டர்களிடையே பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் கொள்கையும் மற்றொரு பக்கம் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சின் பாரத் டோடோ சிந்தனையும் உள்ளது. காங்கிரசின் டிஎன்ஏ பீகாரில் இருப்பதால் தான் இங்கு வந்துள்ளோம். அனைத்து எதிர்கட்சிகளும் இங்கு வந்துள்ளன. ஒன்றாக இணைந்து பாஜவை தோற்கடிக்கப்போகிறோம்” என்றார்.

* பாட்டியால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்….
ஒடிசாவின் பவானிபாட்னாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜ தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், ‘‘தற்போது விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் எமர்ஜென்சியின்போது சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் இப்போது பேரன் ராகுல்காந்தியுடன் கைகோர்த்துள்ளனர். லாலு பிரசாத் 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நிதிஷ்குமார் 20 மாதங்கள் சிறையில் இருந்தார். உத்தவ் தாக்கரே கூட்டத்தில் பங்கேற்க சென்றதை பார்த்தேன். அவரது தந்தை பால் தாக்கரே காங்கிரஸ் கட்சியை முற்றிலும் எதிர்த்தவர். உலக தலைவர்கள் பிரதமர் மோடியை புகழ்வதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.

* பிரதமர் மோடியை தனியாக தோற்கடிக்க முடியாது
பீகாரில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘‘எமர்ஜென்சியின்போது ஜனநாயகத்தின் கொலையை பார்த்த சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் கீழ் கூடியிருப்பது முரண்பாடாக உள்ளது. அவர்களால் பிரதமர் மோடியை தனியாக எதிர்கொள்ள முடியாது என்ற செய்தியை அனுப்பியுள்ளனர். மோடியை தனியாக தோற்கடிக்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* தெலங்கானா, சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தான் தேர்தல்களில் பா.ஜ துடைத்து எறியப்படும்
பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் சென்று கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ‘’இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது இரு சித்தாந்தத்திற்கு இடையிலான போர். ஒரு பக்கம் காங்கிரசின் ஒற்றுமை சித்தாந்தம். மறுபக்கம் பா.ஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரிவினை சித்தாந்தம். வெறுப்புணர்ச்சியை அன்பால்தான் வெல்ல முடியும், வெறுப்பால் வெல்ல முடியாது. பா.ஜ வன்முறை, வெறுப்பை பரப்புதல், நாட்டை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அமைதி, ஒற்றுமைக்காக வேலை செய்து வருகிறோம். இங்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வந்துள்ளனர். ஒன்றிணைந்து பா.ஜவை தோற்கடிப்போம். கர்நாடகாவில் வெற்றி பெற்றதுபோல் தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜ துடைத்து எறியப்படும். பா.ஜனதா எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் ஏழை மக்கள் பக்கம் நிற்கிறோம். பா.ஜ என்றால் 2 அல்லது 3 பேருக்கு ஆதாயம் கிடைப்பது’’ என்றார்.

* மோடி மீண்டும் பிரதமரானால் இனி தேர்தலே இருக்காது
எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்த பிறகு மம்தா கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான சர்வாதிகார அரசு மீண்டும் ஆட்சி அமைத்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாக போராடுவோம். எங்களை எதிர்க்கட்சி என்று அழைக்காதீர்கள், நாங்கள் தேசபக்தர்கள். நாங்கள் ‘பாரத மாதா’வை நேசிக்கிறோம். மணிப்பூர் எரியும் போது நாங்களும் வலியை உணர்கிறோம். பாஜ சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், பாஜவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

பாஜ வரலாற்றை மாற்ற விரும்புகிறது. ஆனால் வரலாறு காப்பாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். பாஜ அரசு செய்த அட்டூழியங்கள் பயங்கரமானவை. தங்களுக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து ஆட்சி நடத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் பின்னால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மற்ற விசாரணை அமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. அவர்களுக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். இது நடக்கக் கூடாது. வேலையில்லாத் திண்டாட்டம், சாமானியர்கள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ராகுல் திருமணம் செய்ய வேண்டும்
செய்தியாளர் சந்திப்பில் கடைசியாக பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ராகுலை பார்த்து, திருமணம் செய்து கொள்வதற்கான எங்களது ஆலோசனையை நீங்கள் ஏற்கவில்லை. திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் உங்கள் அம்மா தொடர்ந்து வருத்தப்படுகிறார்.  நாங்கள் உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க விரும்புகிறோம் என்றார்.

* அடுத்த கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா?
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும் வரை காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்பது ஆம்ஆத்மிக்கு கடினமாக இருக்கும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பீகாரில் வெற்றி பெற்றால்…
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாட்னாவில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தொண்டர்களிடையே பேசுகையில்,‘‘பீகாரில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் வெற்றி பெறுவோம். சிறு சிறு வேறுபாடுகளை நீக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” என்றார்.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi