நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 23, 24ல் சென்னையில் ஆலோசனை: அரசியல் கட்சிகள், போலீஸ்-உயர் அதிகாரிகளுடன் கருத்துக்கேட்பு

சென்னை: தமிழகத்தில் எந்த தேதியில், எத்தனை கட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து கருத்துகள் கேட்பதற்காகவும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வருகிற 23ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 10.35 மணியளவில் சென்னை விமானநிலையம் வருகிறார். பிறகு மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்கிறார்.

மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், 24ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அதேபோல், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனையடுத்து தலைமைச்செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

பின்னர் அன்றைய தினமே மாலை 3.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த 2 நாள் ஆலோசனையை தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாமா, பாதுகாப்பு பணிக்கான துணை ராணுவ வீரர்கள் எத்தனை கம்பெனி வரவழைப்பது, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் பணிகள் மேற்கொள்வது, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, மார்ச் 7ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்