சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழகம் முழுவதும் 20 நாட்கள் அவர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். மேலும் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மொத்தம் 20 நாட்கள் அவர் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளக்கிழமை) தொடங்குகிறார். அவர் இன்று திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்தும், பெரம்பலூரில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை (23ம் தேதி) -தஞ்சை, நாகை, 25ம் தேதி (திங்கட்கிழமை)-கன்னியாகுமரி, திருநெல்வேலி. 26ம் தேதி-தூத்துக்குடி, ராமநாதபுரம், 27ம் தேதி-தென்காசி, விருதுநகர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து 29ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரியிலும், 30ம் தேதி-சேலம், கள்ளக்குறிச்சியிலும், 31ம் தேதி-ஈரோடு நாமக்கல், கரூரிலும், 2ம் தேதி- வேலூர், அரக்கோணம் தொகுதியிலும், 3ம் தேதி-திருவண்ணாமலை, ஆரணி, 5ம் தேதி கடலூர், விழுப்புரத்திலும், 6ம் தேதி-சிதம்பரம், மயிலாடுதுறை. 7ம் தேதி-புதுச்சேரி, 9ம் தேதி-மதுரை, சிவகங்கை, 10ம் தேதி-தேனி, திண்டுக்கல் தொகுதியிலும், 12ம் தேதி-திருப்பூர், நீலகிரியிலும், 13ம் தேதி-கோவை, பொள்ளாச்சி, 15ம் தேதி-திருவள்ளூர், வடசென்னையிலும், 16ம் தேதி காஞ்சிபுரம், பெரும்புதூரிலும், 17ம் தேதி-தென்சென்னை, மத்திய சென்னை தொகுதியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதேபோல திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினரும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.