நாடாளுமன்ற தொகுதி பங்கீடு; இந்தியா கூட்டணியில் இன்று பேச்சுவார்த்தை: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேசிய கூட்டணி குழுவின் உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் இதுபற்றி கூறுகையில், ‘இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்படும்.

இதற்காக கூட்டணி கட்சிகளின் தலைமை அல்லது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்கள் எந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிக்கிறார்களோ, அந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி என்ன எதிர்பார்க்கிறது என்பதை, எங்களது கட்சியின் தலைமையே முடிவு செய்யும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இருந்தே பேச்சுவார்த்தையை தொடங்குகிறோம். அதே நாளில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பேசுகிறோம். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து, அம்மாநில தலைமை சில கருத்துகளை கூறியுள்ளது. அதனால் அந்த மாநில பேச்சுவார்த்தை பிறகு நடக்கும்’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுபற்றி நேற்று கூறுகையில்,’இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற அனைத்து விஷயங்களும் இன்னும் 10 முதல் 15 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு விரைவில் முடிவு செய்யப்படும். இன்னும் 10-15 நாட்களில் முடிந்து விடும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் இந்த தேர்தலிலேயே நீதியை நிலைநாட்ட முடியும். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டுப் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களை எங்கு நடத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்’ என்று ெதரிவித்தார்.

மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், தலைவர்கள் நியமனம்: புதிதாக சேர்க்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், டெல்லி முன்னாள் எம்எல்ஏவுமான அல்கா லம்பாவை, அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவராகவும், மவுலானா தொகுதியின் எம்எல்ஏவான வருண் சவுத்ரியை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேட்பாளர் தேர்வுக்கு குழு: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான ‘ஸ்கிரீனிங்’ கமிட்டி காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு குழுத்தலைவராக ஹரிஷ் சவுத்ரி, குழு உறுப்பினர்களாக விஸ்வஜித் கதம், ஜிக்னேஷ் மேவானி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில்: மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான வார் ரூம் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவர்களாக கோகுல், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்புக்கான வார் ரூம் தலைவராக வைபவ் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு