நாடாளுமன்ற குழு பரிந்துரை கலப்பட உணவு விற்றால் குறைந்தபட்சம் 6 மாதம் சிறை: 25,000 அபராதம்

புதுடெல்லி: கலப்படம் செய்யப்பட்ட உணவு, குளிர்பானங்களை விற்போருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறை தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் விதிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய 3 குற்றவியல் மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் அதன் அறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. பாஜ எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை அமைச்சகத்துக்கான இக்குழு, கலப்பட உணவு மற்றும் குளிர்பானம் விற்கும் குற்றவாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளது.

கலப்பட உணவுகளை உட்கொள்வதால் மக்களுக்கு ஏற்படும் கடுமையான உடல்நலப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டத்தில், இத்தகைய குற்றத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறை தண்டனையும் அதோடு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், குறைந்தபட்ச அபராதம் ரூ.25,000 ஆக இருக்க வேண்டுமெனவும் கூறி உள்ளது. தற்போது கலப்பட உணவு விற்பவர்களுக்கு 6 மாதம் வரை நீட்டிக்கக் கூடிய சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமாக உள்ளது.

மேலும், இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் பாரதிய நியாய சன்ஹிதாவில் தவறு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவை இடம் பெற்றிருப்பதை குழு வரவேற்றுள்ளது. குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதற்கு பதிலாக சமூக சேவையில் ஈடுபட வைப்பது சீர்த்திருத்த அணுகுமுறையாக இருப்பதோடு, சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என கூறி உள்ளது. அதோடு, சமூக சேவையில் எத்தனை நாட்கள், என்ன மாதிரியான குற்றத்திற்கு எந்த மாதிரியான சமூக சேவை என்பதையும் குறிப்பிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி