நாடாளுமன்றத்தில் இனி பாஜவுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் அறிவிப்பு

புவனேஸ்வர்: நாடாளுமன்றத்தில் இனி பாஜவுக்கு ஆதரவு இல்லை என்று நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜ 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றன.

ஆளும் கட்சியாக இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியால் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் மாநிலங்களவையில் பிஜூ ஜனதாதளத்திற்கு 9 எம்பிக்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பல சட்டங்கள் நிறைவேற பிஜூ ஜனதா தளம் ஆதரவு முக்கியமாக இருந்தது. இப்போது சட்டப்பேரவை தேர்தலில் தோற்றதால் இனிமேல் பா.ஜவுக்கு ஆதரவு இல்லை என்று பிஜூஜனதா தளம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பிஜூஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை தலைவர் சஸ்மித் பத்ரா கூறுகையில்,’ இந்த முறை எங்கள் கட்சி எம்.பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை ஒன்றிய பாஜ அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்தும். மேலும் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையையும் வலுவாக வலியுறுத்துவோம். நிலக்கரி ராயல்டியை திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக பாஜ அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையையும் இம்முறை மிக தீவிரமாக எடுத்துவைப்போம். இனி பாஜவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே. எனவே, ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்கான அறிவுரைகளை எங்களுக்கு நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார்’ என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு