நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பி.எஸ், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன் ஆகியோர் திமுக கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்த்துள்ளனர். நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஷ் கனியிடம் 1,62,782 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார்.

அதேபோல, நெல்லையில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் போட்டியிட்டு 1,65,520 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நடைமுறையின்படி, ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரியும், விஜயபிரபாகரன் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கட்சி தொண்டர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். காவிரி நீர் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். தமிழக முதல்வர் தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை