நாடாளுமன்ற தேர்தல் படுதோல்விக்கு பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நாளைமறுநாள் நடக்கிறது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்த பிறகு சுமார் 2 மாதத்திற்குப்பின் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் 26 தொகுதிகள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில் அந்தந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் நாடாளுமன்ற அதிமுக தேர்தலின்போது வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணத்தை தெரிவித்தனர். அதேநேரம், ஒரு சிலர் கட்சி தலைமையை விமர்சித்து பேசினர். தோல்விக்கான காரணத்தை வேட்பாளர்கள் கூட்டத்தில் கூறினாலும், கட்சி தலைமை சரிவர பதில் அளிக்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்ற பலரும், ‘கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்ற கருத்தை பதிவு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஒரு சிலர் அதற்கு உடன்படவில்லை. பல முன்னணி தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும், 2026 தேர்தல் வரைக்கும் சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தபிறகு சுமார் 2 மாதத்திற்குப்பின் நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!