நாடாளுமன்றத்தில் கலர் குண்டு வீசி தாக்குதல் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் கோபத்தில் உள்ளனர்: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் ஏற்பட்ட கோபம் தான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடந்த கலர் குண்டு தாக்குதல் குறித்து ராகுல்காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பின்னணியில் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை உள்ளன.

பிரதமர் மோடியின் கொள்கைகளால் வேலை கிடைக்காமல் தவித்த இளைஞர்கள் தான் நாடாளுமன்ற பாதுகாப்பை மீறி உள்ளனர். இந்த மீறல் இளைஞர்களிடையே நீண்ட காலமாக கொதித்துக்கொண்டிருந்த கோபத்தின் வெடிப்பு. நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம். இது நாடு முழுவதும் கொதித்தெழுகிறது. மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றார்.

சட்ட உதவி வழங்குவது ஏன்? பா.ஜ கேள்வி

காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில்,’ ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நாடாளுமன்ற உரிமை மீறலில் ஈடுபட்டவர்களின் நெருங்கிய தொடர்பை விளக்க வேண்டும். குறிப்பாக, ராகுல் காந்தி மற்றும் இந்திய ஒற்றுமையாத்திரையில் ராகுலுடன் நெருங்கிய தொடர்புடைய அசிம் சரோட் நாடாளுமன்றத்தில் ஊடுருவல் செய்பவர்களுக்கு சட்ட உதவி வழங்க முன்வந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நிதிதிரட்டும் பிரசாரம் நாளை தொடக்கம்

மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேசத்துக்கு நன்கொடை திரட்டும் பிரசாரத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக தேசத்துக்கு நிதி திரட்டுவோம் என்ற பிரசாரத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை இந்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால், பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோர், இந்த முயற்சியானது மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க ‘திலக் ஸ்வராஜ் நிதி’யால் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி