நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் 2வது எம்பியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடியின் உரைக்கு முன்னதாக எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மணிப்பூர் எம்பி அல்பிரட் அர்தர் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் மணிப்பூர் எம்பி பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி கவுரவ் கோகாய் நேற்று கூறுகையில், மக்களவையில் மிகவும் சோகமான காட்சிகளை நாங்கள் பார்த்தோம். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் எம்பிக்கள் இருவரும் பேச வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியும் விரும்பினார்.

ராகுல் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தார். ஒரு எம்பியை மட்டும் பேச அனுமதித்து மற்றொருவரை அனுமதிக்கவில்லை என்றால் அது மணிப்பூர் மக்களை தவறாக சென்றடையும் என்பதை ராகுல்காந்தி அறிந்திருந்தார். அதனால் தான் இம்பால் எம்பி திங்களன்று பேசினார். மலை பிராந்தியத்தில் இருந்த மற்றொரு எம்பி பேசுவதற்கு அவையில் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர் பேசுவதற்கு 2நிமிடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. பிரதமர் நகைசுவையாக பேசினார், கேலி செய்தார். ஆனால் மணிப்பூர் எம்பியின் பேச்சை கேட்பதற்கு அவருக்கு பொறுமை இல்லை என்றார்.

எப்போது வேண்டுமானாலும் அரசு கவிழும்
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மூன்றில் ஒரு பங்கு அரசு என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் சொல்வது சரி தான். நாங்கள் பத்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் எஞ்சியுள்ளன. மூன்றில் இரண்டு பங்கு பாக்கி உள்ளது. எனவே இந்த கணிப்புக்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்பதை விட என்ன பெரிய உண்மை இருக்க முடியும் என்றார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எப்போதும் போலவே பிரதமர் மோடி திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அரசின் பதவிகாலத்தை குறிக்கவில்லை. பயாலஜிக்கலாக பிறக்காத நமது பிரதமரின் தற்போதைய நிலையை குறிக்கிறது. இரண்டு ‘என்’களின் (சந்திரபாபு நாயுடு, நரேஷ்குமார்) தயவில்தான் மோடியின் ஆட்சி உள்ளது. எந்த நேரத்தில் அவரது ஆட்சி கவிழலாம் என்றார்.

Related posts

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்