நாடாளுமன்ற மக்களவை, 4 மாநில பேரவை தேர்தல்; மார்ச் 13 அல்லது 14ல் தேர்தல் அட்டவணை?.. ஆணைய வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அறிவிப்பை அனேகமாக வரும் மார்ச் 13 அல்லது 14ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான ஆலோசனை குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கும் நேரில் சென்று அந்த மாநில தேர்தல் ஆணையக் குழுவினருடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்றும் இன்றும் தமிழ்நாட்டில் ஆலோசனை நடத்திய அதிகாரிகள், வரும் வாரங்களில் உத்தரப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்துவார்கள். அனைத்து மாநில அதிகாரிகளுடனான ஆலோசனைகள் முடிந்த பின்னர், மக்களவை தேர்தலுக்கான அதிகாரபூர்வ அட்டவணையை வெளியிடுவார்கள்.

அதனால் தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலானது 7 கட்டமாக நடந்தது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல் கடந்த 2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்களிக்கத் தகுதியான சுமார் 97 கோடி வாக்காளர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

அதனால் மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் மக்களவை தேர்தலுக்கான அட்டவணை மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அதிகாரபூர்மாக வெளியாக வாய்ப்புள்ளது. அனேகமாக வரும் மார்ச் 13 அல்லது 14ம் தேதிகளில் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடலாம். தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடனேயே, வழக்கம்போல உடனடியாக தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு