வெளுத்து வாங்கிய மழை பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு: 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர்: கனமழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா இடையே 7 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது. அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் மட்டும் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழையின் காரணமாக அந்தியூர்-பர்கூர்-கர்நாடக மலைப்பாதையில் தாமரைக்கரை அருகில் செட்டிநொடி என்ற இடத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மலைப்பாதையில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. மலையில் இருந்து மண், கற்கள், பாறைகள் என உருண்டு சாலையில் வந்து விழுந்தன. சாலையில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை தமிழகம்-கர்நாடகம் இடையே அந்தியூர் வழியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்லம்பாளையம் வன சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த வாகனங்கள் பர்கூர் காவல் நிலையச் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்களில் பயணிகள் வெகுநேரம் காத்திருந்தனர். போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண், பாறைக் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு ஏற்பட்டிருந்த தாமரைக்கரை பர்கூர் மலைப்பாதையில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

போக்குவரத்தை சீரமைக்கவும், மண்சரிவினை அகற்றிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதையடுத்து 7 மணி நேரத்திற்கு பிறகு நேற்று காலை 9 மணி அளவில் பர்கூர்-கர்நாடகா இடையே மீண்டும் போக்குவரத்து துவங்கியது. ஒரு சில பகுதிகளில் சாலைகள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

Related posts

கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!!

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்