உலக அரங்கில் கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறோம்… இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டு குடியரசு தலைவர் பெருமிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் இன்று கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குதிரைப்பட சூழ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை ஏந்தியபடி குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் பேசுகையில்,” நாடாளுமன்றத்தில் இன்றைய உரை, எனது முதல் உரையாகும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறது.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர்.மீதமுள்ள ஏழை மக்களையும் ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்க முடியும்.வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக ரூ. 1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உள்ளது. நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது; அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.முத்தலாக் அமல், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கிகளின் வாராக்கடன் 4% ஆக குறைந்துள்ளது. இந்தியா உலகிள் இரண்டாவது மிகப்பெரிய கைபேசி உற்பத்தி செய்யும் நாடாக வளர்ந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் அமைத்தது பெருமிதத்திற்கு உரியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்டவை மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் முனைவோரை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பாதுகாப்புத்துறை உற்பத்தி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை உற்பத்தி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும்; கொண்டாடும். இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இத்தகைய நவீனடிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை; யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ. 1,200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பல மாதங்களாக முடங்கி கிடந்த சோழிங்கநல்லூர்-சிறுசேரி மெட்ரோ பணிகள் மீண்டும் தொடங்கின

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி நடக்கிறது