சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர் போராட்டம்: 13ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டி, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி அறிந்த பெற்றோர், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறி நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பெற்றோர்கள் கூறுகையில், ‘‘சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களில் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுபற்றி ஏற்கனவே தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,’’ என்றனர்.

இதனிடையே, பெற்றோர்களை பேச்சுவார்த்தைக்கு பள்ளி நிர்வாகம் அழைத்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து பட்டினப்பாக்கம் – சாந்தோம் நெடுஞ்சாலையில் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளிக்கு வரும் 13ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்குள் சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர். மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

 

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்