பெற்றோர் கண்டித்ததால் ஆந்திராவில் மாயமான சிறுவன் சென்னையில் மீட்பு: உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்

தாம்பரம்: ஆந்திர மாநிலம் கோவாரம், ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவர், ராஜமுந்திரியில் உள்ள சிமென்ட் குடோனில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜெயபால் (14), 8ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் பள்ளிக்கு செல்லாததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சனிக்கிழமை ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிறுவன் 2 நாட்கள் அங்கு சுற்றி திரிந்து, பின்னர் அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்து இறங்கியுள்ளான்.

பின்னர், கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் சிறுவன் சுற்றித்திரிவதை கண்ட பொதுமக்கள், சந்தேகமடைந்து சேலையூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் போலீசார், சிறுவனிடம் விசாரித்தபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், பெற்றோர் கண்டித்ததால் ரயில் ஏறி சென்னை வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்களுக்கு, போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பூந்தமல்லியில் வசிக்கும் உறவினருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், நேற்று சேலையூர் காவல் நிலையம் வந்த அவர் சிறுவனை பத்திரமாக அழைத்து சென்றார்.

Related posts

பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை