பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம் காதலன், நண்பர்களின் வீட்டை சூறையாடி தீ வைத்த பெண்ணின் தந்தை

*தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை : தெலங்கானாவில் காதல் ஜோடியை சேர்த்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் நண்பர்களின் வீட்டை சூறையாடி, தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டை மண்டலம் இடிகலப்பள்ளி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ரவீந்திர். இவரது மகள் காவ்யாஸ்ரீ. இவர் ஹனுமகொண்டா ஹசன்பர்த்தி கல்லூரியில் படித்து வருகிறார். அதேகல்லூரியில் படிக்கும் ரஞ்சித்துடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் ரஞ்சித் வேறு சாதி என்பதால் திருமணத்தை ஏற்க முடியாது என காவ்யா ஸ்ரீயின் தந்தை ரவீந்தர் கூறி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தார்.

இதுதொடர்பாக பலமுறை பஞ்சாயத்துகள் நடந்தன. ஆனால் காவ்யஸ்ரீ தனது முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டார். இந்நிலையில் காவ்யாஸ்ரீ, ரஞ்சித் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனது பெற்றோருக்கு காவ்யாஸ்ரீ செல்பி வீடியோ அனுப்பினார். அந்த வீடியோவில், ‘ரஞ்சித்துடன் தான் இருப்பேன். என்னை யாரும் தேட வேண்டாம். என்னால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டு இருந்தால் மன்னிக்கவும். எந்த முடிவாக இருந்தாலும் அது ரஞ்சித்துடனே’ என செல்பி வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இதனால் ரவீந்தர் தனது மகள் மீது கோபமடைந்து ரஞ்சித் மற்றும் திருமணத்திற்கு உதவிய நண்பர்கள் மற்றும் ரஞ்சித் வீடுகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து 4 வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இதனால், கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தத போலீசார் அங்கு விரைந்து வந்து கிராமத்தில் மீண்டும் தகராறு ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காவ்யாஸ்ரீ, ரஞ்சித் தம்பதியினர் உயிருக்கு பயந்து வாரங்கல் காவல் ஆணையர் ரங்கநாத்தை சந்தித்து நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர். ரஞ்சித் வீட்டில் தீ வைத்ததில் வீட்டில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் ₹10 லட்சம் பணமும் எரிந்து சாம்பலானது. மேலும் 7 சவரன் தங்க நகைகளும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Related posts

சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லுக்கு 1.65 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடி

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு