பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 25,000 அபராதம்

 

நாமக்கல்: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்பி ராஜேஸ்கண்ணன், மருத்துவ துறை இணை இயக்குனர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர், தாசில்தார்கள், உள்ளாட்சி துறையினர், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அகில இந்திய சாலைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற விபத்து குறித்து விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் நடைபெற்ற 33 உயிரிழப்பு விபத்துகளில் 17 உயிரிழப்புகள் இருசக்கர வாகன ஓட்டிகளால் நடைபெற்றுள்ளது. இவ்விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் மற்றும் இளம் வயதில் உள்ளவர்களால் வாகனங்கள் இயக்கப்பட்டு 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிக விபத்து ஏற்படும் இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, விபத்தை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்ய கலெக்டர் அதிகரிகளை அறிவுறுத்தினார். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்லவும், பள்ளி மாணவர்கள் மற்றும் இளம்வயதில் உள்ளவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவதை கண்காணித்து அதிக அளவில் தணிக்கை செய்து அறிக்கை வழங்க போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது, தார்பாலின் போர்த்தாமல் செல்லும் மணல் லாரிகள், படிக்கட்டில் பயணம் அனுமதிக்கும் பேருந்துகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி அதிக அளவு தணிக்கை அறிக்கை வழங்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மோட்டார் வாகன சட்டத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25,000 அபராதமும், அவர்களது பெற்றோர்களுக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்க சட்ட விதிகள் உள்ளதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் என கலெக்டர் கேட்டுகொண்டார். கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’