பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

செங்கல்பட்டு: விதிமுறைகளை மீறி அரசு நிர்வாகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜியிடம், சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அருண்ராஜியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தினுடைய தலைமை கணக்காயர் தகவலின்படி 2019ல் காலாவதியான செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி தொடர்ந்து 5 ஆண்டுகளாக மக்கள் பணம் 28 கோடி ரூபாயை கட்டணமாக சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. காலாவதியான சுங்கச்சாவடியை பொருத்தமட்டில் 40 சதவீத கட்டணம் மட்டுமே பராமரிப்புக்காக வசூல் செய்ய வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. அந்த விதியை இவர்கள் பின்பற்றுவது இல்லை. முற்றிலும் கலெக்சன் ஏஜென்ட் மட்டுமே அமர்ந்துகொண்டு வாகனங்களுக்கான பணத்தை மட்டும் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுர் சுங்கச்சாவடி இருப்பதினால், நமது மாவட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகங்களுக்கும் அவப்பெயரை தேடி கொடுக்கக்கூடிய நிலை உள்ளது.

எனவே, மரியாதைக்குரிய மாவட்ட கலெக்டர், உடனடியாக தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்ட விதிகளை பயன்படுத்தி, இந்த சுங்கச்சாவடியை பயன்படுத்தக்கூடிய இலட்சோப லட்ச மக்களுடைய நிலமையை கருத்தில் கொண்டு, பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். இம்மனுவின் மூலம் ஒட்டுமொத்த சாலை பயன்பாட்டாளர்கள் சார்பில் இக்கோரிக்கை மனுவை தங்களுக்கு அளிக்க விரும்புகிறோம். இந்த பரனுர் சுங்கச்சாவடியினுடைய அத்துமீறலை கண்டித்து மக்களை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட பெருந்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத காரணத்தினால், இந்த நிலையை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்